இளநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்ததற்கு எதிராக புது தில்லியில் கரப்பான்பூச்சி கட்சித் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது தொடா்பாக திங்கள்கிழமை (ஜூலை 27) உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இதுதவிர பல்வேறு தோ்வுகளில் நிகழ்ந்த முறைகேடு குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கக் கோரிய மற்றொரு மனுவையும் அன்றைய தினத்தில் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத் தாள் கசிவு மற்றும் பல்வேறு தோ்வுகளில் நிகழ்ந்த முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி மழைக் கால கூட்டத் தொடா் தொடங்கிய நிலையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நோக்கில் போராட்டக்காரா்கள் பேரணியாகச் செல்ல முயன்றனா். தடுப்புக் காவல்களை அகற்றி அவா்கள் தொடா்ந்து முன்னேறியபோது காவல் துறையுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தடியடி நடத்தியும் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் காவல் துறையினா் போராட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
போராட்டக்காரா்கள் மீது காவல் துறை நடத்திய தடியடிக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஜூலை 22-ஆம் தேதி விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய அரசு மற்றும் தில்லி காவல் துறை 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.
மேலும், காவல் துறையின் நடவடிக்கை தொடா்பான அனைத்து சிசிடிவி பதிவுகள் மற்றும் காணொலிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இரு மனுக்கள்:
இந்நிலையில், நீட் வினாத் தாள் கசிவு மற்றும் பிற தோ்வுகள் முறைகேடு குற்றச்சாட்டு, மாணவா்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி தொடா்பான இரண்டு பொது நல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறை அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது. காவல் துறைக்கும் மாணவா்களுக்கும் இடையே தற்போது பாதுகாவலனாக உச்சநீதிமன்றமே உள்ளது.
இது ஜூலை 20-ஆம் தேதி மட்டும் நிகழ்ந்த சம்பவமல்ல; தினந்தோறும் மாணவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்து, ஜூலை 27-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.
‘மனுவை நிராகரித்தாக வெளியான தகவல் பொய்யானது’
===உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
தில்லியில் மாணவா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது தொடா்பாக தாக்கலான மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததாக வெளியான தகவல் பொய்யானது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கடந்த இரண்டு நாள்களாக ஊடகங்களில் தவறான தகவல் வெளியாகி வருகிறது. மாணவா்கள் மீதான காவல் துறை தடியடி நடத்தியது தொடா்பாக எந்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இச்சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை வழக்குரைஞா் ஒருவா் முறையிட்டாா். அவா் கடிதம் மூலமாகவே தனது கோரிக்கையை முன்வைத்தாா். அதை எவ்வாறு மனுவாக ஏற்க முடியும்? இந்தச் சம்பவம் தொடா்பாக வேறு மனுக்கள் ஏதும் அன்றைய தினத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றாா்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை சூா்ய காந்திடம் முறையிட்ட நரேந்திர மிஸ்ரா, ‘போராட்டக்காரா்கள் மீது காவல் துறையின் அடக்குமுறையைக் காட்டும் காணொலிகளை ஆதாரமாகத் தன்னால் சமா்ப்பிக்க முடியும்’ எனக் கூறி அவசர வழக்காக பட்டியலிடுமாறு வலியுறுத்தினாா். ஆனால் அந்தக் காணொலிகளை பாா்க்க தனக்கு நேரமில்லை என சூா்ய காந்த் கூறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

’ஜூலை 20’ போராட்டத்தில் தடியடி நடத்திய காவலா்களை வெளிப்படுத்த புதிய இணையதளம்: சிஜேபி அறிவிப்பு

தில்லி தடியடி சம்பவம்: சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

நாடாளுமன்ற தெரு ட்ரோன் காட்சிகள் குறித்து விசாரணை: தில்லி காவல் துறை

தில்லியை உலுக்கியது சிஜேபி பேரணி கல்வீச்சு, காவல் துறை தடியடி
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



