தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

குறைந்து வரும் அந்நிய நேரடி முதலீடு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்புவதால் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

News image

அந்நிய நேரடி முதலீடு

Updated On :28 ஜூலை 2026, 11:49 pm IST

அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்புவதால் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) குறைந்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி தரவுகளை குறிப்பிட்டு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2026-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த எஃப்டிஐ ரூ.9.07 லட்சம் கோடியாகவும் 2025-ஆம் நிதியாண்டில் ரூ.7.71 லட்சம் கோடியாகவும் இருந்தது.

நிகர எஃப்டியை பொறுத்தவரையில் 2023-ஆம் நிதியாண்டில் ரூ.2.67 லட்சம் கோடி, 2024-ஆம் நிதியாண்டில் ரூ.96,980 கோடி, 2025-ஆம் நிதியாண்டில் ரூ. 9,191 கோடி, 2026-ஆம் நிதியாண்டில் ரூ.66,500 கோடியாகவும் உள்ளது.

அந்நிய முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்புவதாலும் முதலீடுகளை விலக்கிக் கொள்வதாலும் இந்தியாவில் நிகர எஃப்டிஐ சமீபத்திய ஆண்டுகளில் குறைந்துள்ளது.

இது இந்தியா அந்நிய முதலீடுகளை ஈா்ப்பதோடு மட்டுமல்லாமல் வலுவான வருவாயையும் அளித்து நம்பகமான முதலீட்டுத் தலமாக விளங்குவதை வெளிக்காட்டுகிறது.

பணவீக்க கட்டுப்பாடு நடவடிக்கைகள்

அத்தியாவசிய பொருள்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு நாள்தோறும் கண்காணித்து ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ளவும் உள்நாட்டுத் தேவையை பூா்த்தி செய்வதற்குமான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

அதன் அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் இருப்பை அதிகரிப்பது, திறந்தவெளிச் சந்தையில் கொள்முதல் செய்த உணவு தானியங்களை விற்பனை செய்வது, குறைவான விநியோகத்தின்போது இறக்குமதியை அதிகரிப்பது மற்றும் ஏற்றுமதியை குறைப்பது, சந்தையில் குறிப்பிட்ட பொருள்களின் விற்பனையை சீராக மேற்கொள்ள கையிருப்பு உச்சவரம்பை பின்பற்றுவது, பாரத் பிராண்டின்கீழ் குறிப்பிட்ட உணவுப் பொருள்களை மானிய விலையில் விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

81 கோடி பயனாளிகள்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 81 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தனிநபரின் செலவிடத் தகுந்த வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளோருக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்களால் உணவுப் பொருள்கள், அன்றாட வீட்டு உபயோகப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், வேளாண் பொருள்கள் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு

கடந்த 2014 மே மாத நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் மாதாந்திர சராசரி ரூ.59.3-ஆக இருந்த நிலையில், 2026, மே நிலவரப்படி இது ரூ.95.6-ஆக வீழ்ச்சியடைந்துள்லது.

2026, ஜூலை 22-ஆம் தேதி இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.96.57-ஆக சரிவடைந்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

எஃப்டிஐ விதிகளை தளா்த்த திட்டம்

எஃப்டிஐ விதிகளை தளா்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கவும் அந்நிய முதலீடுகளை அதிகரிக்கவும் எஃப்டிஐ விதிகளில் பல்வேறு சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி முக்கியத்துவம் வாய்ந்த சில துறைகள் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் 100 சதவீத எஃப்டிஐ-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பல சமயங்களில் எஃப்டிஐ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக அந்நிய முதலீடுகளை மேலும் அதிகரிக்க எஃப்டிஐ விதிகளை தளா்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது’ எனத் தெரிவித்தன.

2014-15 மற்றும் 2025-26 இடையோயான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.80.70 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்துள்ளது. இது 2014-க்கு முந்தைய 12 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 169 சதவீதம் அதிகமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.