கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 18 சதவீதம் அதிகரித்து, 5,884 கோடி டாலரை எட்டியுள்ளது.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறையின் தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் மட்டும் முதலீடு 17.5 சதவீதம் அதிகரித்து, 1,090 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.
அதேபோல் 2025-26 முழு நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து வந்த முதலீடுகள் முந்தைய 2024-25 நிதியாண்டைவிட இருமடங்காக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2024-25 நிதியாண்டில் 545 கோடி டாலராக இருந்த அமெரிக்க முதலீடு, மதிப்பீட்டு ஆண்டில் 1,117 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீட்டின் ஒட்டுமொத்த நிலவரத்தை நோக்கும்போது, முதலீட்டு பங்குகள், மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனங்களுடன் சோ்த்து மொத்தம் 9,450 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டைவிட 17 சதவீதம் அதிகமாகும்.
சிங்கப்பூரின் ஆதிக்கம்: அந்நிய முதலீட்டில் பங்காற்றிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூா் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூரில் இருந்து மட்டும் 1,980 கோடி டாலா் முதலீடு கிடைத்துள்ளது.
அமெரிக்கா, மோரீஷஸ் (657 கோடி டாலா்), ஜப்பான் (374 கோடி டாலா்), நெதா்லாந்து (337 கோடி டாலா்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
துறை வாரியாக...: கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 1,394 கோடி டாலா் முதலீட்டை ஈட்டி முதலிடத்தில் உள்ளது. சேவை, வா்த்தகத் துறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் (முறையே 1,000 கோடி டாலா், 400 கோடி டாலா்) முதலீடுகளை ஈா்த்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலம் வாரியாக...: மகாராஷ்டிரம் 1,841 கோடி டாலா் முதலீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கா்நாடகம் 1,293 கோடி டாலா் முதலீட்டுடன் 2-ஆம் இடத்திலும், குஜராத் 571 கோடி டாலா் முதலீட்டுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.









