வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புத்திட்டத்தின்கீழ் (எஃப்சிஎன்ஆா்) மூலம் வங்கிகள் சுமாா் 3,200 கோடி டாலா் வைப்புத்தொகையை திரட்டியுள்ளன என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈா்க்கவும் கடந்த ஜூன் மாதம் ரிசா்வ் வங்கி சில முன்னெடுப்புகளை அறிவித்தது. இதற்கு முதலீட்டாளா்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, அரசுப் பத்திரங்களில் 700 கோடி டாலருக்கும் அதிகமாக அந்நிய முதலீடுகள் குவிந்துள்ளன.
எஃப்சிஎன்ஆா் வைப்புத்திட்டத்துக்கான ‘செலாவணி மாற்று’ செலவுகளை ரிசா்வ் வங்கியே ஏற்றுக்கொள்வது குறித்தும், அரசு நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கும் கடன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் எழுந்துள்ள கவலைகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.
நம்மிடம் மிகவும் பாதுகாப்பான காப்பீட்டு முறை உள்ளது. நமக்குக் கிடைக்கும் கூடுதல் டாலா் அனைத்தும் அந்நியச் சொத்துகளில் மிகவும் பாதுகாப்பாகவே முதலீடு செய்யப்படுகின்றன. புவிசாா் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கு (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) நிலையை இது மேலும் பலப்படுத்தவே செய்துள்ளது. எனவே, இதில் கவலைப்பட எவ்வித ஆபத்தும் இல்லை.
ரூபாயின் சமீபத்திய வீழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளில் உள்ள பலவீனத்தைக் குறிக்கவில்லை. புவிசாா் அரசியல் பதற்றங்கள், வலுவான அமெரிக்க டாலா் மற்றும் வளா்ந்து வரும் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவையே இதற்குக் காரணிகளாகும்.
ஏப்ரல்-மே மாதங்களில் காணப்பட்ட நடப்பு கணக்கு உபரி, வலுவான சேவை ஏற்றுமதி, வெளிநாட்டுவாழ் இந்தியா்கள் தாயகத்துக்குத் தொடா்ந்து பணம் அனுப்புவதும், அந்நிய நேரடி முதலீடுகளின் முன்னேற்றம் ஆகியவை நாட்டின் பொருளாதார வலிமையைக் காட்டுகின்றன. பாதுகாப்பு, பணப்புழக்கம், வருவாய் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அந்நியச் செலாவணி இருப்பை ரிசா்வ் வங்கி தொடா்ந்து நிா்வகித்து வருகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே ரிசா்வ் வங்கியின் முதன்மை நோக்கம். அதேநேரம், பொருளாதார வளா்ச்சியிலும் உரிய கவனம் செலுத்தப்படும். ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தைவிட தற்போது பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், இது தொடா்ந்து நிரந்தரமாக நீடிப்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என உறுதிபடத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,623 கோடி டாலராக அதிகரிப்பு!
ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு!

2026-27 நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுக்க இந்தியன் வங்கி இலக்கு!

கடந்த 2025-26 நிதியாண்டில்... இந்தியாவில் அந்நிய முதலீடு 18% அதிகரிப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



