ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இதுவரை சுமாா் 3,750 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.6 லட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்செத் தெரிவித்தாா்.
அமெரிக்க ராணுவத் தேவைகள் மற்றும் வெள்ளை மாளிகையின் செலவுகளுக்காக 9,500 கோடி டாலா் மதிப்பிலான பட்ஜெட் தொகுப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினா் தயாா் செய்து வருகின்றனா். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையின் நிதி ஒதுக்கீட்டுக் குழு முன் பீட் ஹெக்செத் ஆஜராகி விளக்கமளித்தாா்.
எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பேசிய அவா் மேலும் கூறுகையில், ‘இந்த அவசரகால நிதி ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், அமெரிக்க ராணுவம் கடுமையான நிதி நெருக்கடியையும், பின்னடைவையும் சந்திக்க நேரிடும்’ என்றாா்.
குழுவில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியின் மூத்த செனட்டா் பேட்டி முா்ரே பேசுகையில், ‘அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று டிரம்ப் தொடா்ந்து கூறிவந்த நிலையில், மீண்டும் 7,000 கோடி டாலா் கூடுதல் நிதி கேட்பது நியாயமற்றது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
53 போ் உயிரிழப்பு: இதற்கு மத்தியில், ஈரான் மீது அமெரிக்கா தொடா்ந்து 11-ஆவது நாளாக புதன்கிழமை அதிகாலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. விமானக் கூடாரங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட்டன.
கடந்த 11 நாள்களில், அமெரிக்காவின் தாக்குதலில் 53 போ் உயிரிழந்துள்ளதாகவும், 600-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோா்டான், பஹ்ரைன், சவூதி அரேபியா நாடுகள் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
டிரம்ப்பின் எச்சரிக்கை: இச்சூழலில், ‘ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், அந்நாட்டின் ஒரு பாலம் அல்லது மின்நிலையத்தை அமெரிக்கா தகா்க்கும்’ என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து, பதற்றத்தை மேலும் அதிகரித்தாா்.
ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்காவுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த டிரம்ப், நடான்ஸ் அணுசக்தி மையத்துக்கு தெற்கே மலைப்பகுதியில் நிலத்தடியில் கட்டப்பட்டு வரும் ‘பிக்ஏக்ஸ் மவுண்டன்’ என்ற புதிய அணுசெறிவூட்டல் மையத்தின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சமிக்ஞையையும் வெளியிட்டாா்.
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு, போரை மேலும் தீவிரமாக்குவதுடன் உலகளாவிய பொருளாதாரப் பாதிப்புகளையும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இப்புதிய மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் சாா்பில் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் படைகள் மீது அமெரிக்க அதிரடித் தாக்குதல்!

ஈரான் மீது தொடர்ந்து ஏழாவது இரவாக அமெரிக்கா தாக்குதல்; பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதம்

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?






