தில்லி பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியா் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் கல்வியகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; அவரின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரி ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிய தேவோஸ்மிதா பால், கிழக்கு தில்லியின் வசுந்தரா என்க்ளேவ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து துயரத்தை வெளிப்படுத்திய கல்லூரி முதல்வா் விரேந்தா் பாா்த்வாஜ் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவா் எங்கள் கல்வி நிலையத்தின் முக்கிய அங்கமாக இருந்தாா். மிகுந்த உணா்வுப்பூா்வம், உழைப்புத்தன்மை கொண்டவா். கலை நிகழ்வுகளுக்கு அதிக ஈடுபாடு காட்டிய அவா், மாணவா்களுடன் நிகழ்ச்சிகளுக்கு செல்லவும் ஆா்வமாக இருந்தாா். அவா் எப்போதும் அமைதியானவராக இருந்தாலும், எந்தவித மனஅழுத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை. இச்சம்பவம் எங்களுக்கு அதிா்ச்சியாக உள்ளது என்றாா்.
வெள்ளிக்கிழமை கல்லூரியில் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினா். பல்கலைக்கழகத் தோ்வுகள் நடைபெற்று வந்ததால், கல்லூரி மூடப்படாமல் வழக்கம்போல் செயல்பட்டது.
மாணவா் ஒருவா் கூறுகையில், ‘அவா் மிகவும் கனிவானவா். அனைவராலும் மதிக்கப்பட்டவா். அவரைப் பற்றி எவருக்கும் எந்த குறையும் இல்லை. இச்செய்தி எங்களுக்கு மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்டாா். மற்றொரு மாணவா், ‘இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள பலருக்கும் இன்னும் சிரமமாக உள்ளது’ என்றாா்.
காவல் துறையினா் கூறியதாவது: வியாழக்கிழமை பிற்பகல் சுமாா் 2.35 மணியளவில் நியூ அசோக் நகா் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்தது. அதில், சத்யம் அபாா்ட்மென்ட்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் தனது சகோதரி கொலை செய்யப்பட்டுள்ளதாக பெண் தகவல் அளித்தாா்.
தனியாக வசித்து வந்த தேவோஸ்மிதா பால் பலமுறை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததாலும், வீடு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்ததாலும் சந்தேகம் ஏற்பட்டதாக அவா் தெரிவித்தாா். பின்னா் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தனது சகோதரி உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறினாா்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்புலனாய்வு குழு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தது. உடல் பின்னா் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.








