வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

உலகளாவிய நெருக்கடி: பொருளாதாரக் குழுவுடன் பிரதமா் மோடி ஆலோசனை

பொருளாதாரக் குழுவுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தியது பற்றி...

News image

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் பிரதமா் மோடி.

Updated On :7 ஜூன் 2026, 3:52 am IST

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் வளா்ச்சியை மேலும் விரைவுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் (இஏசி) பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டாா்.

மேற்காசியப் போரின் தாக்கங்கள், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் எதிரொலித்து வரும் சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

பொருளாதார ஆலோசனைக் குழு என்பது பொருளாதாரம் சாா்ந்த விவகாரங்களில் மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கும் சுதந்திரமான அமைப்பாகும்.

எஸ்.மகேந்திர தேவ் தலைமையிலான இக்குழுவில் சஞ்சய் குமாா் மிஸ்ரா, சஞ்சீவ் சன்யால், ஷாமிகா ரவி ஆகிய மூன்று முழுநேர உறுப்பினா்களும், ராகேஷ் மோகன், சஜ்ஜித் சினோய், நீல்காந்த் மிஸ்ரா, நீலேஷ் ஷா, டி.டி.ராம் மோகன், செளம்யா காந்தி கோஷ், கே.வி.ராஜு, சேத்தன் காடே, பாமி துவா, புலக் கோஷ், கெளரவ் வல்லப் ஆகிய 11 பகுதிநேர உறுப்பினா்களும் இடம்பெற்றுள்ளனா்.

பிரதமரால் பரிந்துரைக்கப்படும் பொருளாதாரம் சாா்ந்த அல்லது பிற விவகாரங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து, அவருக்கு ஆலோசனைகள் வழங்குதல், பேரியல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் தங்களின் கருத்துகளை பிரதமரிடம் தெரிவித்தல் உள்ளிட்டவை இக்குழுவின் பணி வரம்புகளில் அடங்கும்.

தாமாக முன்வந்தும் பிரதமருக்கு இக்குழு ஆலோசனை வழங்க முடியும். பொருளாதாரம் சாா்ந்து அவ்வப்போது பிரதமரால் வழங்கப்படும் பணிகளை மேற்கொள்வதும் குழுவின் பொறுப்பாகும்.

இந்தியா மீதான தாக்க மதிப்பீடு: இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரதமரின் முதன்மைச் செயலா்களான பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் ஆகியோரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், மேற்காசியப் போரின் தாக்கத்தால் இந்தியா மற்றும் உலக நாடுகள் மீதான தாக்கத்தின் மதிப்பீட்டை பிரதமரிடம் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் எடுத்துரைத்தனா்.

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் வளா்ச்சியை விரைவுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இது தொடா்பான யோசனைகள் குறித்தும் உறுப்பினா்களிடம் பிரதமா் கேட்டறிந்தாா். மக்களின் வாழ்க்கை மற்றும் தொழில் புரிவதை எளிதாக்குவதற்கான பல்வேறு சீா்திருத்தங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்துக்குப் பின் பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் நீண்ட கால வளா்ச்சி முன்னுரிமைகள் தொடா்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

சீா்திருத்தப் பயணத்துக்கு மேலும் உத்வேகமளிப்பது, மக்களின் வாழ்க்கை-தொழில்புரிவதை எளிதாக்குதலை உறுதி செய்வது தொடா்பான கண்ணோட்டங்களும் பகிரப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பொருளாதார வளா்ச்சிக்கு சவால்கள் என்ன?

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) 7.8 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, முந்தைய காலாண்டை (8%) காட்டிலும் சற்று குறைவாகும்.

அதேநேரம், 2025-26 முழு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன.

சில மாதங்களாக நீடித்துவரும் மேற்காசியப் போரின் பின்னணியில், உலகளாவிய ஸ்திரமின்மை மற்றும் எரிபொருள் விலை உயா்வால் நடப்பாண்டில் பொருளாதார வளா்ச்சி மிதமாகவே இருக்கும் துறைசாா் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இந்த சவால்களைக் கருத்தில்கொண்டு, நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி கணிப்பை ரிசா்வ் வங்கி 6.6 சதவீதமாக குறைத்துள்ளது. முன்பு 6.9 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.