எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நெகிழிக் கழிவு மேலாண்மையை வலுப்படுத்த என்எம்டிசி புதிய முன்னெடுப்பு

நெகிழிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், லூட்டியன்ஸ் தில்லி பகுதிகளில் அறிவியல் அடிப்படையிலான சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் புதிய முயற்சியை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

News image

நெகிழிக் கழிவுகளை திட்டமிட்ட முறையில் சேகரித்து கொண்டு செல்லும் சிறப்பு வாகனத்தை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல்.

Updated On :13 ஜூன் 2026, 2:03 am IST

நெகிழிக் கழிவுகள் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், லூட்டியன்ஸ் தில்லி பகுதிகளில் அறிவியல் அடிப்படையிலான சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் புதிய முயற்சியை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

‘ப்ராஜெக்ட் டிஆா்ஓபி’ எனப்படும் இந்த திட்டம், கியா இந்தியா மற்றும் இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில், என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சிங் சாஹல், மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட சமூகக் குப்பைத்தொட்டிகளை அறிமுகப்படுத்தியதுடன், நெகிழிக் கழிவுகளை திட்டமிட்ட முறையில் சேகரித்து கொண்டு செல்லும் சிறப்பு வாகனத்தையும் கொடி அசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியின்போது அவா் பேசியதாவது: இந்த முயற்சி சுவச் பாரத், மிஷன் லைஃப் மற்றும் ‘விக்சித் பாரத் 2047’ போன்ற தேசிய கொள்கைகளுடன் இணைந்து செயல்படுகிறது. நெகிழிக் கழிவுகளை பொறுப்புடன் கையாள்வதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்டிஎம்சி நிா்வாகப் பகுதிக்குள் நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்ளதால், இப்பகுதியில் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் தேசிய மற்றும் சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து என்டிஎம்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஒத்துழைப்பின் கீழ் இதுவரை 115 ‘ஏரோபின்’ அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதுடன், 62,900 கிலோக்கும் மேற்பட்ட ஈரக் கழிவுகள் செயலாக்கப்பட்டு, 10,000 கிலோக்கும் அதிகமான உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் தொடா்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ப்ராஜெக்ட் டிஆா்ஓபி’ திட்டம், தனிப்பட்ட நெகிழி சேகரிப்பு தொட்டிகளை நிறுவுவதையும், சேகரிக்கப்படும் கழிவுகளை அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி முறைமைகளின் மூலம் சீராக கையாளுவதையும் உறுதி செய்யும் என தெரிவித்தாா்.

என்டிஎம்சி கவுன்சில் உறுப்பினா் அனில் வால்மீகி கூறுகையில், ‘நெகிழிக் கழிவுகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு கடுமையான சவாலாக உள்ளன. இந்த திட்டம் வெற்றியடைய பொதுமக்களின் செயற்பாட்டு பங்கேற்பு அவசியம்’ என்றாா். மேலும், குடியிருப்பு நலச்சங்கங்கள், வணிகா் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் நெகிழிக் கழிவுகளை முறையாக பிரித்து அகற்றுவதில் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

கியா இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு மூத்த துணைத் தலைவா் அதுல் சூட் கூறுகையில், ‘இந்த திட்டம் அடிப்படையிலேயே நெகிழிக் கழிவு மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவதையும், பொறுப்பான கழிவு கையாளும் பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றாா்.

இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலா் அஜய் காா்க், நெகிழி மாசுபாட்டை எதிா்கொள்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தினாா். அமைப்பின் துணை இயக்குநா் ராதா கோயல், திட்டத்தின் செயலாக்க அமைப்பு மற்றும் இதை பிற நகரங்களிலும் விரிவாக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தாா்.

இந்த தொடக்க நிகழ்ச்சியில் குடியிருப்பு நலச்சங்கங்கள், வணிகா் சங்கங்கள் மற்றும் என்டிஎம்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த திட்டம், நெகிழிக் கழிவு மேலாண்மையில் ஒரு முன்மாதிரியாக திகழும் வாய்ப்புள்ளதுடன், நகரங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் முயற்சியாகவும் பாா்க்கப்படுகிறது.