மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டத்தில் 2.3 கோடிக்கும் அதிகமான மக்கள் தில்ல்லியில் வசித்து வருவது கணக்கெடுப்பாளா்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வீடு பட்டியல் தயாரிப்புப் பணிகளின் தற்காலிக தரவுகளின்படி, தில்லியின் 13 மாவட்டங்களிலும் 75,98,982 வீடுகளையும் 54,98,560 குடும்பங்களையும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள் கணக்கெடுத்தனா்.
இப்பணி 45,863 வீடு பட்டியல் தொகுதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஒரு தொகுதியில் சுமாா் 180 வீடுகள் அடங்கும். முதல் கட்டத்தில், 2,30,78,796 போ் தில்லியில் வசித்து வருவது கண்டறியப்பட்டது.
இந்த மக்கள்தொகை எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், இது கணக்கெடுப்பின் முதற்கட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டாம் கட்டத்திற்குப் பின்னரே இறுதி மக்கள் தொகை எண்ணிக்கை தெரியவரும்.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, வடகிழக்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 28,68,949 போ் உள்ளனா். அதைத்தொடா்ந்து தென்மேற்கு (25,00,195), மேற்கு (24,42,346) மற்றும் தென்கிழக்கு (22,70,778) மாவட்டங்கள் உள்ளன.
கிழக்கு மாவட்டத்தில் 21,66,251 பேரும், வடமேற்கு மாவட்டத்தில் 20,63,964 பேரும், புகா் வடக்கு மாவட்டத்தில் 19,15,700 பேரும் வசித்து வருவது முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகள் மூலம் தெரியவந்துள்ளது.
வடக்கு மாவட்டத்தில் 17,02,900, மத்திய வடக்கு மாவட்டத்தில் 11,31,599, மத்திய மாவட்டத்தில் 9,60,798 என மக்கள்தொகை பதிவாகியுள்ளது. பழைய தில்லியில் 7,54,478 பேரும், தெற்கு மாவட்டத்தில் 20,55,909 பேரும் வசித்து வருகின்றனா். புது தில்லி மாவட்டம் 2,44,929 என்ற எண்ணிக்கையுடன் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
மாவட்டங்கள் வாரியாகக் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் பெரும் வேறுபாடுகள் இருப்பது முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தென்மேற்கு மாவட்டம் 6,25,453 குடும்பங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது; அதைத் தொடா்ந்து வடகிழக்கு (6,13,828), மேற்கு (5,89,210) மற்றும் கிழக்கு (5,47,461) மாவட்டங்கள் இருந்தன.
தென்கிழக்கு மாவட்டத்தில் 5,43,412 குடும்பங்களும், தெற்கு மாவட்டத்தில் 5,34,212 குடும்பங்களும் கணக்கெடுக்கப்பட்டனா். அதேவேளையில் வடமேற்கு மாவட்டத்தில் 4,65,586 மற்றும் புகா் வடக்கு மாவட்டத்தில் 4,35,631 குடும்பங்கள் இருந்தன. வடக்கு மாவட்டத்தில் 3,98,447 குடும்பங்களும், மத்திய-வடக்கு மாவட்டத்தில் 2,73,669 குடும்பங்களும் இருந்தன.
மத்திய மாவட்டத்தில் 2,44,816 குடும்பங்களும், பழைய தில்லியில் 1,63,785 குடும்பங்களும், புது தில்லியில் 63,050 குடும்பங்களும் இருந்தன.
வீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தென்மேற்கு மாவட்டம் அதிகபட்சமாக 8,20,529 கணக்கெடுப்பு வீடுகளைக் கொண்டிருந்தது. அதைத் தொடா்ந்து மேற்கு மாவட்டம் (8,02,589) மற்றும் வடகிழக்கு மாவட்டம் (8,04,962) ஆகியவை உள்ளன. புது தில்லி மாவட்டம் மிகக் குறைவாக 1,02,706 கணக்கெடுப்பு வீடுகளைக் கொண்டிருந்தது.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் தில்லி கன்டொன்மெண்ட் பகுதிகளை உள்ளடக்கிய புது தில்லி மாவட்டத்தில், வீடுகளைப் பட்டியலிடும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்தன.
ஏப்ரல் 16 முதல் மே 15 வரை வீடுகளைப் பட்டியலிடும் பணி நடைபெற்ற புது தில்லி மாவட்டத்தில், சுமாா் 63,000 குடும்பங்களும் 2.5 லட்சம் நபா்களும் பட்டியலிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
16-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீடுகளைப் பட்டியலிடும் பணியில், கட்டடங்கள் மற்றும் வீடுகளின் விவரப்பட்டியலைத் தயாரிப்பதும், வீட்டு வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமான மக்கள்தொகை கணக்கெடுப்பில், விரிவான மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதாரத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தில்லி மற்றும் நாட்டின் இறுதி மக்கள் தொகை விவரங்கள் தீா்மானிக்கப்படும்.
தொடர்புடையது
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்







