மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பங்கேற்று உரையாற்றினார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களை தலைமையேற்று நடத்திய பிரதமர் மோடி, பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து அவரும் யோகாசனங்களை செய்தார். ”ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பது இந்த நிகழ்வின் மையக்கருத்தாக அமைந்தது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் சில பகுதிகளில் ஜூன் 21 மிக நீண்ட நாளாகக் குறிக்கப்படுகிறது. மேலும் சர்வதேச யோகா தினம் காரணமாக, இந்த நாள் உலகின் மிகப்பெரிய கொண்டாட்ட நாளாகவும் மாறியுள்ளது.
யோகா நமது உடலை நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கச் செய்கிறது. அது நமது ஆற்றல் அளவை உயர்வாக வைத்திருக்கிறது. மேலும், அமைதியான, மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழவும், நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது.
”ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற மையக்கருத்து முதியவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து வயதுடையவர்களுக்கும் தேவையான ஒன்றாக அமைகிறது. யோகா நமது வாழ்க்கை முறைக்கு இன்றியமையாதது மட்டுமல்ல, உலகின் சிறந்த எதிர்காலத்துக்கும் அது ஒரு அவசியமான தேவையாகும்.
நாம் ஒரு உறுதிமொழி எடுப்போம். ’யோகாவை ஒரு நாளுக்குள் சுருக்கிக் கொள்ள மாட்டோம். யோகாவை நமது வாழ்வின், குடும்பத்தின், வருங்கால சந்ததியினரின் ஒரு அங்கமாக மாற வழிவகை செய்வோம்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகழ்வில் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோர் காணொளி மூலம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Narendra Modi participated in and addressed the International Yoga Day celebrations held in Kolkata, West Bengal, on Sunday (June 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.












