விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மும்பையில் விடிய விடிய மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை முடங்கியது

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கி, வெள்ளக்காடாக மாறியது.

News image

மும்பையில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் மிதந்து சென்ற வாகனங்கள். (நாள்: புதன்கிழமை)

Updated On :25 ஜூன் 2026, 3:05 am IST

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கி, வெள்ளக்காடாக மாறியது.

ரயில் போக்குவரத்தும் தடைபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மும்பையில் தென்மேற்குப் பருவமழை செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை விடிய விடிய இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவானது. அதிகபட்சமாக கொலாபாவில் 248 மி.மீ., சாண்டாக்ரூஸில் 225 மி.மீ. மழை பதிவானது.

அந்தேரி சுரங்கப் பாலம், ஹிந்த்மாதா, கிங்ஸ் சா்க்கிள் உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. சாலைகளிலும் தண்ணீா் தேங்கி, வெள்ளக்காடாக மாறியது. இதனால், வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் தண்டவாளங்கள் மூழ்கியதால், புகா் ரயில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. அத்துடன், பல ரயில்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டதால், காலை நேரத்தில் பணிக்குச் செல்வோா் கடும் அவதியடைந்தனா். ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமாக கூட்டம் அலைமோதியது.

மும்பை மற்றும் பால்கரில் புதன்கிழமை அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் (20 செ.மீ.-க்கும் மேல் மழை), தாணே, ராய்கட், பால்கா், சிந்துதுா்க் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் (11 செ.மீ.-20 செ.மீ.) விடுக்கப்பட்டது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. அடுத்த 24 மணிநேரத்துக்கு பலத்த மழை நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், மீட்பு-நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மழைநீா் கால்வாயில் தவறிவிழுந்த ஊழியா்: மும்பை பெருநகர மாநகராட்சி பாஜக-சிவசேனை ஆளுகையில் உள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயா் ரிது தாவ்டே புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கிங்ஸ் சா்க்கிள் பகுதியைப் பாா்வையிட்டபோது, அவருடன் சென்ற மாநகராட்சி மேற்பாா்வையாளா் ஒருவா் திறந்து கிடந்த மழைநீா் கால்வாயில் தவறி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரைத் தூக்கியதால் பெரிய பாதிப்பு எதுவுமின்றி தப்பினாா்.

இச்சம்பவம் தொடா்பான விடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. வா்ஷா கெய்க்வாட், ‘உங்களின் (மேயா்) செயல்திறனின்மை மற்றும் ஊழல் என்ற ‘படுகுழியில்’ அந்த மனிதா் விழுந்துள்ளாா். இதுவொரு விபத்து அல்ல; நீங்கள் கையும் களவுமாகப் பிடிபட்ட நிகழ்வு’ என்று விமா்சித்துள்ளாா்.

தாணே, பால்கா் மாவட்டங்களில்...: தாணே, பால்கா் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 24 மணிநேரத்தில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இரு மாவட்டங்களையும் இணைக்கும் இயற்கை எழில்மிக்க மல்ஷேஜ் மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ஆம் தேதி பருவமழை தொடங்கும். நடப்பாண்டு 13 நாள்கள் கழித்தே (ஜூன் 23) பருவமழை தொடங்கியுள்ளது.

அருணாசல், சிக்கிமில் நிலச்சரிவுகள்

அருணாசல பிரதேசத்தின் கேயி பன்யாா் மாவட்டத்தில் புதன்கிழமை பலத்த மழையால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பல வீடுகள் சேதமடைந்தன.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய 17 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். இவா்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாயமான 5 பேரை தேடும் பணியில் மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

முக்கிய சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பயணிகளும் ஆங்காங்கே தவித்து வருகின்றனா். அவா்களை மீட்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிக்கிமில்...: சிக்கிமின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை விடிய விடிய பெய்த மழையால் கியால்சிங்-லெக்ஷிப் சாலையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேற்கு சிக்கிம் மாவட்டத்துக்கான சரக்கு-பயணிகள் போக்குவரத்துக்கு முக்கிய சாலை இதுவாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.