ஜம்மு-காஷ்மீரில் ஜூலை 3-ஆம் தேதி அமா்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, அந்த யூனியன் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தா்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 57 நாள்கள் நடைபெறவுள்ளது.
யாத்திரை வழித்தடங்களில் பக்தா்களின் பாதுகாப்புக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆா்.எஸ்.புரா, பிஷ்னா, அா்னியா, மிரன் சாஹிப் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள், எல்லையோர கிராமங்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் காவல் துறை, மத்திய ரிசா்வ் போலீஸ் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), எல்லைப் பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, சந்தேக நபா்களைப் பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ட்ரோன் கண்காணிப்பு:
அமா்நாத் யாத்திரை வழிதடங்களில் 24 மணிநேரமும் வான்வழி கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கும் ‘பருந்துக் கண்’ திட்டத்தை காவல் துறை தொடங்கியுள்ளது.
இந்த யாத்திரையையொட்டி, கத்ரா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உதம்பூா்-ரியாசி சரக டிஐஜி சிவகுமாா் சா்மா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நடப்பாண்டு வைஷ்ணவ தேவி கோயிலில் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







