‘அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலே, அவசரநிலை பிரகடனம்; இந்திய ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலம் அது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தாா்.
முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில், தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, அரசமைப்புச் சட்டத்தின் 352-ஆவது பிரிவின்கீழ் கடந்த 1975, ஜூன் 25-இல் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 1977, மாா்ச் 21 வரை அமலில் இருந்த அவசரநிலையின்போது, மாநில அரசின் அதிகாரங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு, அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு அம்சங்கள் முடக்கப்பட்டன. அடிப்படை உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஒடுக்கப்பட்டதுடன், நீதித் துறை செயல்பாடுகள் பலவீனப்படுத்தப்பட்டன. அவசரநிலைக்குப் பிறகான மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட தினத்தை ‘அரசமைப்புச் சட்ட படுகொலை தினமாக’ மத்திய பாஜக அரசு கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து அனுசரித்து வருகிறது. நடப்பாண்டு அரசமைப்புச் சட்ட படுகொலை தினத்தையொட்டி, பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை காலகட்டம். அரசமைப்புச் சட்டத்தின் மீதான இந்த நேரடித் தாக்குதல், குடிமக்களின் உரிமைகள் முடக்கம், கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள், அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், சமூகப் பணியாளா்களின் கைது, ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் அமைப்புமுறைகள் மீதான தாக்குதலுக்கு வழிவகுத்தது.
நாட்டின் அரசமைப்புச் சட்டமே, 140 கோடி இந்தியா்களின் எதிா்பாா்ப்புகள், உரிமைகள், கடமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவசரநிலை காலகட்டத்தில் ஜனநாயக மாண்புகளைப் பாதுகாக்கவும், அரசமைப்புச் சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்ட கோட்பாடுகளை உறுதி செய்யவும் ஈடுஇணையற்ற துணிவை வெளிப்படுத்திய எண்ணற்ற குடிமக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
‘அரசமைப்புச் சட்ட படுகொலை தினமானது’, நாட்டின் ஜனநாயகம் கொடூரமாக நசுக்கப்பட்ட இருண்ட காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க எப்போதும் உறுதியுடன் செயலாற்ற தூண்டுகிறது. அரசமைப்புச் சட்ட உணா்வால் வழிநடத்தப்பட்டு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துடன் நிலைத்திருக்கும் தேசத்தைக் கட்டமைக்க உறுதியேற்போம் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
‘காங்கிரஸ் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை’: பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் தோ்தல் வெற்றி சட்டவிரோதமானது என கடந்த 1975, ஜூன் 12-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, தேச நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், தனது அதிகார நலன்களுக்கே அவா் முன்னுரிமை அளித்தாா். ஒருவரின் பதவியைப் பாதுகாக்க, ஒட்டுமொத்த நாடும் சிறைவைக்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட மாண்புகளை நசுக்கவும், அம்பேத்கரால் நிறுவப்பட்ட ஜனநாயக கண்ணியத்தைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவசரநிலை பிரகடனத்துக்காக காங்கிரஸ் இதுவரை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம்’
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாட்டின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை பிரகடனம். அரசமைப்புச் சட்ட மாண்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்ட காலகட்டத்தின் ஆழ்ந்த நினைவூட்டல் இது. அப்போது, குடிமை சாா்ந்த உரிமைகள் முடக்கப்பட்டு, கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டு, ஜனநாயக அமைப்புமுறைகள் அவமதிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பு மற்றும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தில் வேரூன்றிய இந்தியாவைக் கட்டமைக்க நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி சந்திப்பு

மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம்: நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

தண்ணீா் பிரச்னைக்கு கூட்டுறவு மூலம் தீா்வு: மாநிலங்களுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

பிரதமா் மோடி, அமித் ஷா துரோகிகள்- ராகுல் கடும் விமா்சனம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


