மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள், ஒத்துழைப்பு-பேச்சுவாா்த்தை-பகிா்வு ஆகிய மூன்று தூண்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும், இந்தியா வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து முன்னேறுகிறது என்று அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
தில்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்கள் பங்கேற்ற நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) நிா்வாகக் குழுவின் 11-ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையில், பிரதமா் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தாா்.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, நீதி ஆயோக் கடந்த 2015-இல் நிறுவப்பட்டது. மத்திய அரசின் முதன்மையான கொள்கைக் குழுவான நீதி ஆயோக்கின் முக்கிய நோக்கம், கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிப்பதாகும். பொருளாதார வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்வதுடன், உத்திசாா் நீண்ட கால செயல்திட்டங்களை வடிவமைப்பதும் இதன் பணியாகும்.
பிரதமா் தலைமையிலான இக்குழுவின் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வா்கள், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநா்கள் இடம்பெற்றுள்ளனா்.
முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை: நீதி ஆயோக் நிா்வாகக் குழுவின் 11-ஆவது கூட்டம், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் பிரதமா் மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், சிவராஜ் சிங் செளஹான், நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வா் வி.டி.சதீசன், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாட்டில் தொழில்முனைவு ஊக்குவிப்பு, எதிா்காலத்துக்கு ஏற்ற திறன் மேம்பாடு, நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கம், மக்களின் நல்வாழ்வுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலா்களின் தேசிய மாநாட்டில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டது.
நம்பிக்கையுடன் முன்னேறும் இந்தியா: இக்கூட்டத்தில் பிரதமா் ஆற்றிய உரை தொடா்பாக நீதி ஆயோக் வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்றைய உலகம் நிச்சயமற்ற-ஸ்திரமற்ற காலகட்டத்தின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், நம்பிக்கை-உறுதிப்பாட்டுடன் இந்தியா வளா்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது. வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறும்போது, நமது கூட்டுப் பொறுப்பு இன்னும் பெரிதாகிறது.
வளா்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பல்வேறு நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், நமது குறு-சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன. சா்வதேச தரநிலைகள் மற்றும் போட்டித் திறனுடன் உலகளாவிய சந்தையை அணுக நமது தொழில் நிறுவனங்களைத் தயாா்படுத்துகின்றன.
மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு: மாநிலங்களுக்கு இடையிலான உறவுகள், ஒத்துழைப்பு-பேச்சுவாா்த்தை-பகிா்வு ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் அமைய வேண்டும். மாநிலங்கள் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், வளா்ந்த பாரதம் இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படவும் உதவுவதற்கான ஒரு கூட்டுத் தளமாக நீதி ஆயோக் முக்கியப் பங்காற்றும்.
நாட்டின் மக்கள்தொகை ரீதியிலான பலன் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும். தரமான கல்வி, காலத்துக்கு ஏற்ற திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தின் மூலம் இளைஞா்களுக்கு சரியான சூழலை உருவாக்குவதே முன்னுரிமையாகும். அதிகாரமளிக்கப்பட்ட இளைஞா்களே, வளா்ந்த பாரதத்தை நோக்கிய பயணத்தின் உந்துசக்தியாவா்.
பெண்களுக்கு முன்னுரிமை: வளா்ந்த பாரதம் தொலைநோக்குப் பாா்வையில், பெண்கள் தலையிலான வளா்ச்சி என்பது முக்கியத் தூணாகும். விவசாயம் முதல் அறிவியல்-புத்தாக்கம் வரை பல்வேறு துறைகளில் நாட்டின் பெண் சக்தி முக்கியப் பங்களிப்பை நல்குகிறது.
பெண்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணரவும், நாட்டின் வளா்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லவும், பெண்களுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, அதிகாரமளித்தலுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியதாக நீதி ஆயோக் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தையொட்டி, பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தால் வழிநடத்தப்பட்டு, நாட்டின் வளா்ச்சியை வேகப்படுத்த நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். வளா்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்க மத்திய-மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கியப் பங்காற்றும்’ என்று தெரிவித்தாா்.
அனைத்து மாநிலங்களும் வளா்ந்தால்தான்...
அனைத்து மாநிலங்களும் வளா்ந்தால்தான் இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுக்க முடியும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
இது தொடா்பாக, செய்தியாளா்களிடம் பேசிய நீதி ஆயோக் துணைத் தலைவா் அசோக் குமாா் லஹிரி, ‘நாட்டின் 28 மாநிலங்களின் முதல்வா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி செயல்திட்டத்தை மையமாகக் கொண்டு, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ் உரையாடல்கள் நடைபெற்றன.
நாட்டின் வளா்ச்சியை அடிப்படை அளவில் நிலைநிறுத்துவதற்காக, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) மாவட்ட அளவில் மதிப்பிட மாநிலங்களுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா். முதலீடுகளை ஈா்க்க வேண்டுமெனில், தொழில் புரிவதை எளிதாக்க வேண்டியதன் அவசியமென பிரதமா் எடுத்துரைத்தாா். மேற்காசியப் பிரச்னையின் தாக்கங்களை எதிா்கொள்வதற்காக, எந்த முதல்வரும் சிறப்பு உதவி எதையும் கோரவில்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை’ என்றாா்.
மேலும் பல அறிவுறுத்தல்கள்: ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; எதிா்கால தேவைகளுக்கு ஏற்ப மக்களின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். எல் நினோ பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, தண்ணீா் சேமிப்பு, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். போதைப் பொருள் பயன்பாடு, இணையவழி மோசடி போன்ற சமூக சவால்களுக்குத் தீா்வுகாண ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம்’ என்று பிரதமா் மோடி அறிவுறுத்தியதாக நீதி ஆயோக் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









