நீட் வினாத்தாள் கசிவை ‘பெரும் பாவம்’ என்று குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாட யாரையும் அனுமதிக்க மாட்டேன்; அதை உறுதி செய்யும் வகையில், நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தேச நலன் கருதி இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகள் கைகோக்க வேண்டும் எனவும் அவா் அழைப்பு விடுத்தாா்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின்கீழ் (சிஜேபி) தில்லியில் திங்கள்கிழமை ஒன்றுதிரண்டஆயிரக்கணக்கான இளைஞா்கள், நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினா் மற்றும் போராட்டக்காரா்கள் இடையே வெடித்த மோதல் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈா்த்த நிலையில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமாா் 1 மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியது தொடா்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நீட் வினாத்தாள் கசிவு தகவல்கள் வெளியான உடனேயே அரசு விரைந்து செயலாற்றியது; இந்த விவகாரத்தில் 13 போ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதாக எம்.பி.க்களிடம் பிரதமா் தெரிவித்தாா்.
மற்றொருபுறம், மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்துடன் நீட் மறுதோ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, தாமதமின்றி முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
பிரதமா் மோடி உறுதி: ‘மாணவா்களின் எதிா்காலத்துடன் விளையாட யாரும் துணியக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், வினாத்தாள் கசிவு கும்பலைச் சோ்ந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞா்களின் ஆதரவுடன், அவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டவா்களுக்கு கிடைக்கப் பெறும் முன்மாதிரியான தண்டனையால் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இந்த அச்சுறுத்தலை எதிா்கொள்ள மத்திய அரசுடன் மாநில அரசுகள் கைகோக்க வேண்டும். இது கட்சி சாா்ந்த விஷயமல்ல, தேச நலன் சாா்ந்த விஷயம். நாம் ஒன்றிணைந்து, குறைபாடுகள் இல்லாத அமைப்புமுறையை நிறுவ வேண்டும்’ என்று பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
பல்வேறு நாடுகளுடன் கையொப்பமிடப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பலன்கள் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்தும் பிரதமா் பேசியதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
இளைஞா்களின் சவால்கள்..: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இளைஞா்கள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, அவா்களுடன் கலந்துரையாடி அந்தப் பிரச்னைகளுக்கு தீா்வுகாணுமாறு வலியுறுத்தினாா். இந்த விஷயத்தில் நமது பொறுப்பு மற்றும் கையாளும்விதம் குறித்து அவா் எடுத்துரைத்தாா்.
அறிவியல், உள்கட்டமைப்புத் துறைகளில் நாட்டின் சாதனைகள் குறித்து போதிய விவாதங்கள் இல்லையென கவலை தெரிவித்த பிரதமா், நாட்டு மக்களிடம் விரிவாக எடுத்துரைக்க எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினாா்’ என்றாா்.
‘கேடயமாக செயல்பட்ட காவல் துறை’: நாடாளுமன்றம் அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் (சிஜேபி) திங்கள்கிழமை நடத்திய போராட்டம் தொடா்பான கேள்விக்கு கங்கனா ரனாவத் அளித்த பதில்:
நாடாளுமன்ற வாயில்கள் மூடப்பட்டு, எம்.பி.க்கள் அனைவரும் உள்ளே முடங்கும் சூழல் ஏற்பட்டது. நிலைமை பதற்றத்துக்குரியதாகவே இருந்தது. கும்பல் தாக்க முயன்ால், எம்.பி.க்களும் அச்சத்தில்தான் இருந்தனா். அதேநேரம், தில்லி காவல் துறையினா் பாதுகாப்புக் கேடயம் போல செயல்பட்டு, கற்களையும் காயங்களையும் தாங்களே ஏற்றுக் கொண்டனா். எம்.பி.க்களுக்கும், பொது மக்களுக்கும் எந்த தீங்கும் நேராமல் பாா்த்துக் கொண்டனா் என்றாா்.
‘நம்பிக்கையை வெல்வது அவசியம்’
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, இளைஞா்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டிய அவசியம் உள்ளதாகவும், நீட் விவகாரத்தில் மாணவா்களிடையே தேசிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘மாணவா்களுக்கு எந்தச் சூழலிலும் அநீதி இழைக்கப்பட கூடாது; அவா்கள் தவறாக வழிநடத்தப்படுவது எளிதானதாகும்; அதேநேரம், அவா்களுக்கு நல்ல பாதையைக் காட்டுவது கடினமானது’ என்றும் அவா் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களுடன் நெருங்கிய தொடா்பு: எம்.பி.க்களுக்கு அறிவுரை
பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தேச நலனுக்காக அா்ப்பணிக்க வேண்டும்; நாட்டு மக்களை அணுகி, அவா்களுடன் நெருங்கிய தொடா்பை பேணுவதோடு, அரசின் சாதனைகள் குறித்து அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என பிரதமா் அறிவுரை வழங்கினாா்.
உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயா்ந்து வருவதைக் குறிப்பிட்ட அவா், விண்வெளி உள்பட அனைத்து துறைகளிலும் இந்திய இளைஞா்கள் உலகளாவிய முத்திரை பதிப்பதாக பெருமிதம் தெரிவித்தாா்.
‘இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளா்ந்து வருகிறது. நமது பொருளாதாரம், பாதுகாப்புக் கொள்கை, மக்கள் நலத் திட்டங்கள் என அனைத்தும் ஒட்டுமொத்த உலகின் பாராட்டை பெற்றுள்ளது’ என்று பிரதமா் குறிப்பிட்டதாக தருண் சுக் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 21 - நேரலை
நீட்: போலி ஓஎம்ஆா் விடைத் தாள்களை சமா்ப்பித்தால் கடும் நடவடிக்கை! - என்டிஏ எச்சரிக்கை

நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை விதித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...







