விமர்சிக்க வேண்டாம்
எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்தும் எந்த செயலிக்கும் தடைவிதிப்பதுதான் சரியான முடிவு. ஒரு தவறு நேர்கையில் குறிப்பிட்ட துறை அமைச்சரைப் பதவியிலிருந்து விலகச் சொல்லும்போது இதுபோன்ற தடை விதிப்பதற்கு விமர்சனம் தேவையில்லை. நல்லதை நாடும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவின் நடைமுறைகளைப் பின்பற்றிதான் இந்தச் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தில்லி உயர்நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு குறையைக் களைய மாற்று வழி எடுப்பது தவறில்லை.
பி. சுந்தரம், வெண்ணந்தூர்.
ஆராய்ந்து அனுமதிக்கலாம்
அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் மனிதனை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். எந்த ஒரு நிகழ்விலும் எதிர் நிகழ்வு என்பது இருக்கத்தான் செய்யும். எதிர்வினை அதிகரித்து அதன் காரணமாக பாதிப்பு எழும்போது அந்தக் கருவியை செயலிழக்கச் செய்வதுதான் சரி. டெலிகிராம் செயலியை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தும்போது அது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால், தவறாக பயன்படுத்தும்போதுதான் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசும் ஒரு செயலியை அனுமதிக்கும்போது அதன் சாதக}பாதகங்களை ஆய்வு செய்த பிறகு செயல்முறைக்குக் கொண்டு வந்தால் முறைகேடுகளைத் தவிர்க்கலாம்.
சீனி. மணி, பூந்தோட்டம்.
ஏற்றுக்கொள்ள முடியாது
கடந்த முறை நீட் தேர்வு நடைபெற்ற போது இந்த செயலி மூலமாகத்தான் வினாத்தாள்கள் கசிந்திருக்கும் என்று ஒரு நம்பப்பட்ட செய்தி வந்ததால், இந்தச் செயலியைத் தடை செய்திருக்கிறார்கள். டெலிகிராம் என்ற இந்த ஒரு செயலியைத் தடை செய்வதால் மட்டும் வினாத் தாள்கள் வெளிவர முடியாதா என்ன? இன்னும் பிற செயலிகள் வழியாகவும் வெளிவர வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது. டெலிகிராம் என்ற இந்த செயலி கோடிக்கணக்கான மக்களால் தகவல்களை எளிதாக அடுத்தவருக்கு அனுப்ப சட்டப்பூர்வமாக பயன்படுத்தும் ஒரு செயலி. இந்த செயலியை மட்டும் தடை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான்.
உஷா முத்துராமன், மதுரை.
சமூக விரோதிகளும்...
இந்த முறைகேடு என்பது குறிப்பிட்ட ஒரு செயலி மூலம் மட்டும் நடந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்}ஆப் உள்ளிட்ட ஏராளமான செயலிகள் இது போன்ற முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதில் முடக்கப்பட வேண்டியது சமூக வலைதள செயலிகள் மட்டுமல்ல, இது போன்ற முறைகேடு செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளும்தான். ஏனெனில், இந்தத் தேர்வுக்கு இரவு} பகலாக கண்விழித்து அயராது படித்து தேர்வு எழுத வரும் மாணவ} மாணவிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது மத்திய அரசின் கடமை.
ராம், ஈரோடு.
தடை சரிதான்
நாடு முழுவதும் நடைபெற்று வரும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நிகழாண்டு நீட் வினாத்தாள் முன்பே கசிந்தது நீதிமன்றத்திலும்கூட விவாதப் பொருளாகிவிட்டது. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்றாலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றம் புரிபவர்களுக்கும் அதற்கு உடந்தையாக இருந்த தொழில்நுட்பத்துக்கும் தண்டனை என்கிற அடிப்படையில் தடை விதித்தது சரிதான். பொதுமக்களுக்கு சிறிது பாதிப்பைத் தந்தாலும்கூட...
வி. ரங்கநாதன், பொள்ளாச்சி.
பலன் தராது
இணையம் என்ற கடலில் இருக்கும் ஓர் உயிரினம் போன்றது அந்த செயலி. நமது அரசு ஏன் வாட்ஸ்}ஆப் செயலியைத் தடை செய்யவில்லை என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. நீட் தேர்வு கசிந்த விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை திசை திருப்பும் செயலாகவே இது உள்ளது. இணையத்தில் எந்தச் செயலியின் மூலமாகவும் இந்த வினாத்தாள் கசிவு நிகழ வாய்ப்பு உள்ளது. குற்றவாளிகளைத் தண்டிக்கும் போக்கை விடுத்து செயலிகளைத் தடை செய்வது நமக்கு எந்த விதத்திலும் பலன் அளிப்பதாக இருப்பது இல்லை. இனி எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து இன்னும் நாம் ஆராய வேண்டும்.
சோம. இளங்கோவன், தென்காசி.
தடை சரியல்ல
நீட் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள பெரும் தொகை செலுத்தி பயிற்சி எடுத்துக் கொள்ளும் சூழல் எல்லா மாணவர்களுக்கும் வாய்ப்பதில்லை. டெலிகிராம் செயலி மூலமே அவர்களுக்கு அந்த வாய்ப்பு அமையக்கூடும். அதையும் தடைவிதித்து முடக்கினால் சாதாரண, வசதியில்லாத மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்வது சாத்தியமில்லாததாகிவிடும் நிலை உருவாகும். ஆகவே, நீட் மறுதேர்வுக்கு டெலிகிராம் செயலியைத் தடை விதித்தது சரியல்ல. மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாக நீட் தேர்வு அமையப் பெற்றிருப்பது வேதனை.
ப. கோவிந்தராசு, ஊத்தங்கால்.
தவிர்த்திருக்க வேண்டும்
தவறு செய்ய நினைப்பவர்கள் எந்த சமூக ஊடகத்தையும் பயன்படுத்தி அதே தவறைச் செய்யலாம். அப்படியிருக்க டெலிகிராம் செயலிக்கு தடை விதித்திருப்பது முற்றிலும் தவறானது. தேர்வு நெருங்கும் இறுதி நாள்களில், கல்வி தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், கலந்துரையாடவும் டெலிகிராம் குழுக்களைப் பயன்படுத்தும் சாதாரண மாணவர்களின் படிப்புக்கு இது பாதகமாக அமையும். கல்வித் துறையில் உள்ள முறைகேடுகளையும், வினாத்தாள் பாதுகாப்பில் உள்ள தவறுகளைச் சரி செய்யாமல், இது போன்ற வெளிப்புறத் தடைகளை விதிப்பது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
நடவடிக்கை அவசியம்
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகள் குறித்து தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தகவல் பரிமாற்றத்தின் சக்தி வாய்ந்த மற்றும் பிரபலமான டெலிகிராம் செயலி, நீட் தேர்வு முடியும் வரை மத்திய அரசால் தற்காலிகமாக முடக்கப்பட்டது சரியே. இது சரியான நடவடிக்கைதான் என்று தில்லி உயர்நீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. மேலும், இதற்கு முன்பு நடந்த நீட் தேர்வில் மோசடிகள் செய்தவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் குழப்பமில்லாமல் நீட் தேர்வுகள் நடைபெற மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
பிரசன்னா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.
தும்பை விட்டு...
நீட் மறுதேர்வுக்காக மத்திய அரசு டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்தது சரியல்ல. ஏனெனில், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் காரணம் கூறியது "தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்' செயல். நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக டெலிகிராம் செயலிக்குத் தடை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். தேசிய தேர்வு முகமை, தேர்வு செயல்பாடுகளை மிக கவனமுடன் கண்காணித்து வினாத்தாள் கசிவு நடைபெறாமல் செயல்படுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும். அதுவே அடிப்படைத் தேவை.
அ. குப்புசாமி, கடலூர்.
புதிய வழிகள் தேவை
டெலிகிராம் செயலியை முழுவதுமாக முடக்குவதும் சாத்தியமற்றது. ஏனெனில், பயனாளர்கள் எளிதாக அதன் பிராக்ஸிகளை பயன்படுத்தும் வகையில் டெலிகிராம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பொருத்தவரை கசிந்த வினாத்தாளை அதன் மூலம் பகிர்வது மட்டும் பிரச்னை அல்ல; மாறாக, போலியான வினாத்தாள் கசிவு குறித்தும் போலி செய்திகளைப் பரப்புவதுதான் டெலிகிராம் செயலியின் முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த அவல நிலையை மாற்ற, நீட் தேர்வுக்குப் பதிலாக வேறு வழிகளைக் கண்டறிந்து மாணவர்களைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.
என்.வி. சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
முடக்க முடியாது
நீட் மறுதேர்வின் பொருட்டு டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்தது சரிதான். தடை விதிப்பதால் மட்டும் இந்தச் செயலியின் பயன்பாட்டை முற்றிலும் முடக்க முடியாது. அதே சமயத்தில் இந்தச் செயலியை செயல்பட முடியாமல் செய்ய உரிய மென்பொருளை உருவாக்க வேண்டும். பெரும்பாலும், இன்றைய இளைய தலைமுறையினர் கடின உழைப்பில் நம்பிக்கையற்றவர்களாக, குறுக்கு வழியில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஆகவே, அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகளைஅவர்கள் தவறாக பயன்படுத்தாத வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.
மித மிஞ்சிய நம்பிக்கை
சில சமூக விரோதிகள், பணத்தால் எதுவும் முடியும் என்ற எண்ணத்தில் சுயநலத்துடன் பின்னிய சதிவலை வினாத்தாள் கசிவு. அதில் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டதை விசாரணையில் அறிந்த மத்திய அரசு, அதை நீட் மறுதேர்வு முடியும்வரை செயல்படாமல் தடை விதித்தது சரியான நடவடிக்கையே. இல்லையெனில் முழுவதுமான பாதுகாப்பு முயற்சி முற்றுபெற்றிருக்காது. இதை உச்சநீதிமன்றமும் உறுதிசெய்துள்ளது. மத்திய அரசு தனது பாதுகாப்பு ஏற்பாட்டில் வைத்திருந்த மித மிஞ்சிய நம்பிக்கையே சறுக்கலுக்கு அடிப்படை.
இரா. ரவிக்குமார், சென்னை.
பாடத்திட்டமே அடிப்படை
நீட் மறுதேர்வு நடைபெறும் சமயத்தில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்தது சரியே. பாடதிட்டத்தை ஆழ்ந்து படிக்காமல் நீட் தேர்வில் வெற்றி என்ற குறிக்கோளுடன் சதம் அடித்தவர்கள், சாதனை படைத்தவர்கள் மருத்துவக் கல்வியில் அனாடமி என்ற பாடத்தில் மட்டும் தோல்வியைத் தழுவியதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. திறமையான மருத்துவர்கள் தேவையெனில் பள்ளியில் முழுமையாக பாடத் திட்டங்களில் தேர்ச்சி பெற்றதும் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மாற்றத்தை நீதிமன்றமோ மக்கள் சபையோ தரக் கூடாது. மாணவர்கள்தான் போராடிப் பெற வேண்டும்.
தமிழரசி, மேல்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!

நீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா?

நீட் மறுதோ்வு: டெலிகிராம் செயலி ஜூன் 22 வரை முடக்கம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



