நீட் மறுதேர்வை நடத்துவதற்காக டெலிகிராம் செயலி முடக்கப்பட்டதையடுத்து, வாட்ஸ்ஆப் செயலியும் முடக்கப்படுமா என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி புதன்கிழமை (ஜூன் 17) கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மறுதேர்வு வரும் ஜுன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவதைத் தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை விதித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ராகுல் காந்தி - கோப்புப் படம்
வினாத்தாள் கசிவைத் தடுக்க பிரதமர் மோடி அரசின் புதிய தந்திரமாக டெலிகிராம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, திருடனைக் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர் வீட்டின் கதவில் ஒரு பூட்டைப் போடுவது போல இந்த செயல் உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகளாக டெலிகிராம் செயலி வழியாக தேர்வு தொடர்பான பாடக் குறிப்புகள், கலந்துரையாடல்கள் போன்வற்றை வைத்து படித்து வருகின்றனர்.
அந்த வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்குத் தீர்வாக அமையும்? மேலும், வினாத்தாள் கசிவு கும்பலுக்கும் இது தெரியும். அப்படியானால், அடுத்த தடை யாருக்கு? வாட்ஸ்ஆப் செயலிக்கா?
தேர்வு நாளன்று, மாணவர்கள் உடல் சோதனை செய்யப்படுவார்கள். கத்தரிக்கோலால் சட்டைப்பைகள் கிழிக்கப்படும். விமானப்படை மூலம் வினாத்தாள்கள் அனுப்பப்படும்.
பிரதமர் மோடி அவர்களே இந்த நாடகத்தைக் கைவிடுங்கள். மாணவர்களை அல்ல; வினாத்தாள் கசிவு கும்பலைத் தாக்குங்கள். மாணவர்களின் குரலுக்கு செவிசாயுங்கள். இல்லையெனில், நாட்டின் இளைஞர்களுக்குத் தங்கள் உரிமைகளை எப்படிப் பெறுவது என்று தெரியும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Summary
Following the suspension of the Telegram app in connection with the conduct of the NEET re-examination, Leader of the Opposition in the Lok Sabha and Congress MP Rahul Gandhi questioned on Wednesday (June 17) whether the WhatsApp app would also be suspended.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









