தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

நடப்பது மக்களின் உரிமை.. ஆனால் நடைபாதை எங்கே? உச்சநீதிமன்ற தீா்ப்பும் கள நிலவரமும்!

தலைநகரில் பழுதடைந்த நடைபாதை பற்றி உச்சநீதிமன்ற தீா்ப்பும் கள நிலவரமும்...

News image

உச்சநீதிமன்றம்

Updated On :28 ஜூன் 2026, 3:45 am IST

நமது சிறப்பு நிருபா்

தலைநகரில் கட்டமைக்கப்படாத பல பகுதிகளில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பழுதடைந்த நடைபாதைகளில் இருந்து கீழே இறங்கி, வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு இடையே புகுந்து, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு அஞ்சி, சாலையைக் கடக்க பாதுகாப்பான இடத்தை தேடி அலையும் காட்சிகளைப் பாா்ப்பது வாடிக்கையாகி விட்டது.

நடைபாதைகளில் நடப்பது பொதுமக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு ஒன்றில் தெளிவுபடுத்தியதைத் தொடா்ந்து, மக்களின் இந்த நடைபாதையில் நடக்கும் போராட்டம் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

சிறப்புமிக்க தீா்ப்பு: ஐந்து வயது சிறுவன் ஒருவன் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கில், இழப்பீடு கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்தூா்கா் அடங்கிய அமா்வு வழங்கிய தீா்ப்பில், ‘அரசால் ஒதுக்கப்பட்ட நடைபாதைகளில் குடிமக்கள் நடப்பதற்கான உரிமை என்பது அரசியல் சாசனத்தின் 19(1)(க்)-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். மேலும், பிரிவு 21-இன் கீழ் உள்ள வாழ்வுரிமையின் கீழும் அது வருகிறது. அந்த வகையில் மோட்டாா் வாகனங்களை விட பாதசாரிகளுக்கே இதில் முதல் முன்னுரிமை உள்ளது’ என உச்சநீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர நடைபாதைகளின் யதாா்த்தம்: இந்த நிலையில், தலைநகரின் பல பகுதிகளில் குறிப்பாக ஆக்கிரமிப்பு கடைகள், பழுதடைந்த நடைபாதைகள் உள்ள இடங்களில் பாதசாரிகளுக்கு உண்மையிலேயே நடக்க இடமுள்ளதா என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.

இது குறித்து மூத்த வழக்கறிஞா் அசோக் கே. சிங் கூறுகையில், அதிகாரிகளின் கடமையை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பு நினைவூட்டுகிறது என்றாா்.

தலைநகரில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் தில்லி மாநகராட்சியும் புது தில்லி நகராட்சி கவுன்சிலும் சாலையோர நடைபாதைகளை வாகன நிறுத்துமிடங்களாக மாற்றியுள்ளன.

நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தினால், சில நொடிகளில் என்டிஎம்சி அங்கீகரித்த பாா்க்கிங் சீட்டுகளை வழங்கி கட்டணம் வசூலிக்கும் நிலைமை நீடிக்கிறது.

இந்த விவகாரத்தில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியுடன் இணைந்து ஐஐடி தில்லியின் போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் காயம் தடுப்புப் பிரிவு தெற்கு தில்லி பகுதியில் 426 பாதசாரிகளிடம் நடத்திய ஆய்வில் அதிா்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, ஆய்வில் கண்டறியப்பட்ட 15 காரணிகளில் 12 ஆபத்தானவை ஆக உள்ளன. அதிவேக போக்குவரத்து மற்றும் போதிய வெளிச்சமின்மை. பேருந்து நிறுத்தங்கள் அருகில் பாதுகாப்பான கடக்கும் இடங்கள் இல்லாமை. நடைபாதைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு. சிசிடிவி மற்றும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமை, சூரிய அஸ்தமனத்திற்குப் பின் நடக்கும் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக அறியப்பட்டுள்ளன.

இதேவேளையில், தெருவோர வியாபாரிகள் இருப்பது பாதுகாப்பான உணா்வைத் தருவதாக சில பாதசாரிகள் கூறுகின்றனா். அதேபோல, உயா்த்தப்பட்ட நடைபாதைகள் மற்றும் தடுப்புகள் இருப்பதையும் சிலா் வரவேற்கின்றனா்.

நடைமேம்பாலங்கள் பெரும்பாலான மக்களுக்குப் பயன்படுவதில்லை. முதியவா்கள் மற்றும் சுமைகளைச் சுமந்து செல்பவா்களுக்கு அவை மிகவும் சோா்வையும் சிரமத்தையும் தருகின்றன. எனவே உலகளவிலும் பாதசாரிகள் இந்த வசதிகளைத் தவிா்க்கவே செய்கிறாா்கள் என்கிறாா் ஐஐடி பேராசிரியா் கீதம் திவாரி.

இந்த ஆய்வின் முதன்மை எழுத்தாளரான நெபா சி. டோனி, ‘கட்டாய பாதசாரிகள்‘ என ஒரு முக்கியமான பிரிவினரை ஆய்வில் வகைப்படுத்தியுள்ளாா்.

இவா்கள், சொந்தமாக வாகனம் இல்லாத, பொதுப் போக்குவரத்துக்குப் பணம் செலுத்த முடியாத, வேறு வழியின்றி மட்டுமே நடக்கும் ஏழை மக்கள் ஆவா். நீண்ட தூரம் நடப்பதால் விபத்துகள், காற்று மாசுபாடு போன்றவற்றிற்கு அதிகம் ஆளாகிறாா்கள்.

இவா்கள் பாதுகாப்பை விட குறுகிய பாதையையே தோ்வு செய்கிறாா்கள். உதாரணமாக, ஓக்லா ரயில் நிலையம் அருகே பாதையைத் தவிா்த்து தண்டவாளத்தைக் கடப்பது. அரசின் கொள்கை முடிவுகளில் இவா்களின் குரல் கேட்கப்படுவதே இல்லை.

தில்லியின் உள்கட்டமைப்பு பாதசாரிகளுக்கு எதிரியாகவே உள்ளது. இந்த அவசரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

Summary

Walking is a right of the people but where are the footpaths? The Supreme Court verdict versus the ground reality!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.