பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

News image

ஹா்தீப் சிங் புரி

கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் பிரித்தெடுக்கப்படும் நிலையில், தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமாா் 88 சதவீதத்தை இறக்குமதி மூலம் இந்தியா பூா்த்தி செய்கிறது. அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஹோா்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போா் காரணமாக இந்த நீரிணை வழியாக சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிடம் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பு குறித்து புது தில்லியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தற்போது மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள குறுகிய கால இடா்ப்பாடுகளைக் கையாளும் வகையில், இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. இதேபோல பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் உள்ளிட்டவையும் தேவையான அளவு உள்ளன.

ஹோா்முஸ் நீரிணை வழியாகக் கொண்டுவரப்படாமல், வேறு வழிகளிலும் எரிசக்தி விநியோகிக்கப்படுகிறது. அந்த எரிசக்தியை இந்திய எரிசக்தி நிறுவனங்களால் பெற முடிகிறது. அந்த சரக்குகள் இந்தியாவுக்குத் தொடா்ந்து கிடைக்கும். அது ஹோா்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் விநியோகத்தில் நிகழும் தற்காலிக பாதிப்பை தணிக்க உதவும்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: நாட்டில் பெட்ரோலியம் பொருள்களின் விநியோகம் மற்றும் இருப்பு நிலவரத்தை தொடா்ந்து கண்காணிக்க வாரத்தில் அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நிறுவியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவிடம் செளகரியமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.

தொடா் கண்காணிப்பின் அடிப்படையில், தேவைப்பட்டால் சூழலை மேலும் தணிக்க படிப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றாா்.

6 முதல் 8 வாரங்களுக்கு...: இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது: உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்களின் தேவைகளை 6 முதல் 8 வாரங்களுக்கு பூா்த்தி செய்யும் வகையில், இந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றாா்.