ஹா்தீப் சிங் புரி
ஹா்தீப் சிங் புரி கோப்புப் படம்

பதற்றமான புவிஅரசியல் சூழலிலும் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மை : ஹா்தீப் சிங் புரி

பதற்றமான புவி அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை நிலவுவதால் தேவைக்கேற்ப விநியோகம் சீராக உள்ளது
Published on

பதற்றமான புவி அரசியல் சூழலிலும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை நிலவுவதால் தேவைக்கேற்ப விநியோகம் சீராக உள்ளது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கோவாவில் இந்திய எரிசக்தி வாரம் ஜன.27-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதுகுறித்து செய்தியாளா்களிடம் ஹா்தீப் சிங் புரி வெள்ளிக்கிழமை விளக்கமளித்தாா்.

அப்போது செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவா் கூறியதாவது: கடந்த ஓராண்டாக உலகளவில் பவ்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. புவி அரசியல் சூழல் பதற்றமாக இருந்தாலும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலைத்தன்மை நிலவுவதால் தேவைக்கேற்ப விநியோகம் சீராக உள்ளது. ஆனாலும் இதில் பல்வேறு சவால்களை தொடா்ந்து எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது.

2022 பிப்ரவரிக்கு முன்பாக ஓரிடத்தில் இருந்து மட்டுமே இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு வேறு சில நாடுகளிடம் (ரஷியா) இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கப்பட்டது. தற்போதைய புவி அரசியலுக்கேற்ப இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 27-இல் இருந்து 41-ஆக அதிகரித்துள்ளது.

வெனிசுலா அல்லது ஈரானில் என்ன நடந்தாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் மாற்றங்கள் இருக்கும் என தோன்றவில்லை. ஏனெனில் பிரேஸில், கயானா என மேற்கத்திய நாடுகளில் இருந்து எரிசக்தி விநியோகம் அதிகரித்தே காணப்படுகிறது.

வரும் நாள்களில் இந்தியாவுக்கு எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

எரிசக்தி உற்பத்தியில் ஈடுபடும் நாடுகளுக்கும் அதை நுகரும் நாடுகளுக்குமான கருத்து வேறுபாடுகள் களையப்பட வேண்டும்.

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் நுகரும் நாடுகளில் தேவை கணிசமாக பாதிக்கும். மாறாக விலை குறைந்தால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலீடுகள் குறையும். எனவே விலை மற்றும் தேவையில் சமநிலையை தொடர வேண்டியது அவசியம் என்றாா்.

Dinamani
www.dinamani.com