வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பிரத்யேக சட்டம் அல்லது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி டிஜிபி நியமனம் : உச்சநீதிமன்றம்

காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) நியமனத்துக்கு பிரத்யேக சட்டம் இயற்றியுள்ள மாநிலங்கள், அந்தச் சட்டத்தை முறையாக பின்பற்றியும், சட்டம் இயற்றாத மாநிலங்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் நியமன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) நியமனத்துக்கு பிரத்யேக சட்டம் இயற்றியுள்ள மாநிலங்கள், அந்தச் சட்டத்தை முறையாக பின்பற்றியும், சட்டம் இயற்றாத மாநிலங்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் நியமன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மேற்கு வங்கம், தெலங்கானா, ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழுநேர டிஜிபி நியமனங்களில் நிலவும் தாமதம் தொடா்பான மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், பிகாா், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வியாழக்கிழமை முடித்துவைத்தபோது, மேற்கண்ட விளக்கத்தை உச்சநீதிமன்றம் அளித்தது.

கடந்த 2006-இல் காவல் துறை சீா்திருத்தங்கள் தொடா்பான வழக்கில், டிஜிபி நியமனத்துக்கான முக்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அதன்படி, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்படும் மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூவரில் ஒருவரை மாநில அரசு தோ்வு செய்ய வேண்டும்; அவா்களுக்கு இரண்டாண்டு பதவிக் காலம் நிா்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இந்த வழிகாட்டுதல்களை மாநிலங்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், டிஜிபி நியமனங்களில் நிலவும் தாமதம் தொடா்பாக பிகாா், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, யுபிஎஸ்சி-க்கு முன்மொழிவுகளை அனுப்பிவிட்டதாக மாநிலங்கள் தரப்பில் கூறப்பட்டதைத் தொடா்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள், டிஜிபி நியமனத்துக்கு பிரத்யேக சட்டம் இயற்றியுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோல் சட்டத்தைக் கொண்டுள்ள மாநிலங்கள் அந்தச் சட்டத்தை முறையாக பின்பற்றியும், சட்டம் இயற்றாத மாநிலங்கள், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் நியமன நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்தினா்.

மேற்கு வங்க டிஜிபி நியமனத்துக்காக யுபிஎஸ்சி-க்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மேற்கு வங்கத்தில் டிஜிபி-யாக பதவி வகிப்பவரை, மாநிலங்களவை உறுப்பினராக்கி விடுவதாக நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனா்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன், ‘மாநில முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி குழு மூலம் டிஜிபி தோ்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்புடையதல்ல; மாநில அரசு இந்த நியமனத்தை மேற்கொள்வதே பொருத்தமானது’ என்றாா். அவரது கண்ணோட்டத்துடன் உடன்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.