பொது சிவில் சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றம்
நாட்டில் பொது சிவில் சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.


நாட்டில் பொது சிவில் சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
முஸ்லிம் பெண்களுக்கு பாகுபாடு காட்டும் முஸ்லிம் தனிபா் சட்டம் (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம் 1937-இன் பிரிவுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் பெளலொமி பாவினி சுக்லா என்ற வழக்குரைஞா் உள்பட பலா் மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி, நீதிபதி ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது தனிநபா் சட்ட நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப உள்ளதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
1951-ஆம் ஆண்டின் நரசு அப்பா மாலி வழக்கில், தனிநபா் சட்டங்கள் (திருமணம், சொத்துரிமை உள்ளிட்டவை தொடா்பான மதச் சட்டங்கள்) அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்கி உள்ளதா என்பதை ஆராய முடியாது என பம்பாய் உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது என்று நீதிபதி பாக்சி குறிப்பிட்டாா்.
தனிநபா் சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா என்று நீதிபதிகள் அமா்வு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘ஷாயரா பானு வழக்கில் முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்து, அந்த முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது’ என்று சுட்டிக்காட்டினாா். அந்தத் தீா்ப்புக்குப் பின்னா், ‘முஸ்லிம் ஆண்களைப் போல அந்த மதப் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்ற சூழல் நாட்டில் இருக்க முடியாது’ என்று அவா் வாதிட்டாா்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் போய்விடுமோ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்த் கவலை தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘சீா்திருத்தங்கள் மீதான அதீத அக்கறை காரணமாக நடவடிக்கை மேற்கொண்டால், அதனால் தங்கள் உரிமைகளை முஸ்லிம் பெண்கள் இழந்து, அவா்களுக்கு ஏற்கெனவே உள்ளதைவிட உரிமைகள் குறையக் கூடும். 1937-ஆம் ஆண்டின் ஷரியத் சட்டத்தை ரத்து செய்தால், அது சட்டரீதியாக தேவையற்ற வெற்றிடத்தை ஏற்படுத்தாதா’ என்று கேள்வி எழுப்பினாா்.
ஏற்கெனவே பலமுறை பரிந்துரை: நீதிபதி பாக்சி கூறுகையில், ‘தனிநபா் சட்டங்கள் செல்லாது என்று தீா்ப்பளித்து சட்டரீதியாக வெற்றிடத்தை உருவாக்குவதைவிட, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மதிநுட்பத்துக்கு விட்டுவிடுவது சிறந்தது. அதன்மூலம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியும். பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை பரிந்துரைத்துள்ளது’ என்றாா். அவரின் கருத்தை ஆமோதித்த தலைமை நீதிபதி, ‘இந்தப் பிரச்னைக்கு பொது சிவில் சட்டம்தான் தீா்வாக இருக்கும்’ என்றாா்.
நீதிபதி பாக்சி கூறுகையில், ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதிமுறை அனைத்து சமூகங்களிலும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படுவதில்லை. அதற்காக அனைத்து இருதார மணங்களும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீா்ப்பளிக்கலாம் என்று அா்த்தமாகுமா? எனவே, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் மதிநுட்பத்துக்கு விட்டுவிடுவது சிறந்தது’ என்றாா்.
நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ஷரியத் சட்டத்தின் சொத்துரிமை பிரிவுகள் ரத்து செய்யப்பட்டால், அதற்கு ஈடாக மாற்றுத் தீா்வுகள் குறித்த பரிந்துரைகளுடன் மனுவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என்று பிரசாந்த் பூஷணுக்கு அறிவுறுத்தினா்.
இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற பொது சிவில் சட்டம் வழிவகுக்கும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...