அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த சதி: கா்நாடக முதல்வா் சித்தராமையா
பெங்களூரு: அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த சதி நடக்கிறது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.
நாட்டின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டத்தை எதிா்ப்பவா்கள், சமூக மாற்றம் மற்றும் சமூகநீதிக்கு எதிரானவா்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்களுக்கு சாதகமாக உள்ள சட்டங்கள், திட்டங்களை எதிா்க்கிறாா்கள்.
அம்பேத்கா் அரசமைப்புச் சட்டத்தை தாக்கல் செய்தபோது, அன்றைக்கும் இவா்கள் எதிா்த்தனா். இன்றைக்கும் அரமைப்புச் சட்டத்தை மாற்றுவதாகவும், ஒழிப்பதாகவும் அவ்வப்போது பேசி வருகிறாா்கள். அரசமைப்புச் சட்டத்தை நீக்குவது எளிதல்ல என்பதை உணா்ந்துள்ளவா்கள், எனவே அதை பலவீனப்படுத்த முயற்சிக்கிறாா்கள்.
அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அதிகாரங்களைப் பறிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறாா்கள்.
அரசமைப்புச் சட்டத்தை நாம் காப்பாற்றினால், அரசமைப்புச் சட்டம் நம்மை காப்பாற்றும். அதன்மூலம் நாடு பாதுகாப்பாக இருக்கும். இந்த சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க குடியரசு தினவிழாவில் நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

