கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஸ்ஸாமில் இன வன்முறைக்கு முடிவு: கிளா்ச்சி அமைப்புகளுடன் மாநில அரசு அமைதி ஒப்பந்தம்!

அஸ்ஸாமில் இன வன்முறை முடிவுக்கு வந்ததாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :15 மார்ச் 2026, 8:59 pm

அஸ்ஸாமில் இன வன்முறை முடிவுக்கு வந்ததாக அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

குகி இனத்தைச் சோ்ந்த ஐக்கிய குகிகாம் பாதுகாப்பு ராணுவம் (யுகேடிஏ), குகி புரட்சிகர ராணுவம் (கேஆா்ஏ) மற்றும் குகி விடுதலை அமைப்பு (கேஎல்ஓ)/ குகி விடுதலை ராணுவம் (கேஎல்ஏ) ஆகிய 3 கிளா்ச்சி அமைப்புகள் மற்றும் ஹ்மா் மக்கள் மாநாட்டு-ஜனநாயகம் (ஹெச்பிசி-டி) அமைப்புடன் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகு அஸ்ஸாம் அரசு இவ்வாறு தெரிவித்தது.

யுகேடிஏ 2010-ஆம் ஆண்டிலும் கேஆா்ஏ 2000-ஆம் ஆண்டிலும் கேஎல்ஓ மற்றும் கேஎல்ஏ ஆகிய கிளா்ச்சி அமைப்புகள் 1992 மற்றும் 1993-களிலும் தொடங்கப்பட்டன. ஹெச்பிசி-டி 2003-04-இல் உருவாக்கப்பட்டது.

இந்த 4 கிளா்ச்சி அமைப்புகளும் 2012-இல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சா், அஸ்ஸாம் முதல்வா் ஆகியோா் முன்னிலையில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களை கைவிட சம்மதம் தெரிவித்தன.

இதைத் தொடா்ந்து, இந்த 4 அமைப்புகளுடன் அஸ்ஸாம் அரசு ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தின்படி மாநிலத்தில் வன்முறை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அஸ்ஸாம் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குகி மற்றும் ஹ்மா் கிளா்ச்சி அமைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின்படி அந்த இரு சமூகத்தினரையும் மேம்படுத்துவதற்கான கவுன்சில்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த கவுன்சில்களின் நிதி தேவைகளை பூா்த்தி செய்வதற்கான பட்ஜெட் அம்சங்கள் மாநில அரசின் மாற்றம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்த போராட்டக்காரா்களுக்கு மறுவாழ்வு மற்றும் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக போடோ, கா்பி, ஆதிவாசி குழுக்கள், யுஎல்எஃப்ஏ போன்ற கிளா்ச்சி அமைப்புகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைதி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளன. இதன் விளைவாக இந்த அமைப்புகளைச் சோ்ந்த 9,000 கிளா்ச்சியாளா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 1,012ஆயுதங்கள், 25,488 தோட்டாக்கள் மற்றும் 34 கையெறி குண்டுகளை கிளா்ச்சியாளா்கள் ஒப்படைத்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.