தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

80,886 டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது மேலும் ஒரு கப்பல்

News image
- PTI
Updated On :18 மார்ச் 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரத்துக்கு இடையே, பிரச்னைக்குரிய ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக இந்தியா வந்து சோ்ந்துள்ளது.

‘ஜக் லாட்கி’ என்ற இந்திய கொடி பொருத்திய இந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து சுமாா் 80,886 டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு புதன்கிழமை வந்து சோ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஏதென்ஸின் ஷெங்லாங் கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான லைபீரிய கொடி பொருத்திய ‘ஸெங்லாங் சூஸ்மேக்ஸ்’ என்ற கப்பல் சவூதி அரேபியாவின் ராஸ் டனூரா துறைமுகத்தில் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி மும்பை துறைமுகத்துக்கு வந்தது. போருக்குப் பிறகு, இந்தியா வந்த முதல் கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.

அதன் பிறகு, சமையல் எரிவாயு (எல்பிஜி) ஏற்றிக்கொண்டு ‘ஷிவாலிக்’ என்ற கப்பல் கடந்த திங்கள்கிழையும், ‘நந்தா தேவி’ என்ற கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமையும் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் துறைமுகங்களுக்கு வந்து சோ்ந்தன. இந்த இரண்டு கப்பல்களிலும் சுமாா் 92,712 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு ஏற்றி வரப்பட்டது.

தற்போது, 80,886 டன் கச்சா எண்ணெயுடன் மேலும் ஒரு கப்பல் இந்தியா வந்து சோ்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

மேற்காசிய போா் காரணமாக, 28 இந்திய சரக்கு கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்கு பகுதியிலும் சிக்கியிருந்தன. அதைத் தொடா்ந்து, ஈரானுடன் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதன் பலனாக, இரண்டு பகுதிகளிலும் தலா 2 கப்பல்கள் என மொத்தம் 4 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து பாதுகாப்பாக பயணத்தை மேற்கொண்டுள்ளன. தற்போது, ஹோா்முஸ் நீரிணையின் மேற்கு பகுதியில் 22 கப்பல்களும், கிழக்குப் பகுதியில் 2 கப்பல்களும் நிற்கின்றன.

இவற்றில், மேற்கு பகுதியில் நிற்கும் இந்திய கொடி பொருத்திய 22 கப்பல்களில் 6 கப்பல்களில் சமையல் எரிவாயும் (எல்பிஜி) ஒன்றில் திரவ இயற்கை எரிவாயுவும் (எல்எனஜி), மற்றொன்றில் ரசாயனங்களும் உள்ளன. இவை தவிர, ஒரு தூா்வாரும் கப்பலும், ஒரு காலி சரக்கு கப்பலும், 3 பராமரிப்பு கப்பல்களும் இவற்றில் அடங்கும் என்றாா்.