அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!
அஸ்ஸாமில் ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி...
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா(கோப்புப்படம்)
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா(கோப்புப்படம்)
அஸ்ஸாமின் சமாரியா தொகுதியில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான அஸோம் கண பரிஷத்தும் வேட்பாளா்களை அறிவித்துள்ளதால், அந்தத் தொகுதியில் கூட்டணி கட்சிகளுக்குள் போட்டி எழுந்துள்ளது.
126 வேட்பாளா்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களம் காண்கிறது.
அஸ்ஸாமில் பாஜக கூட்டணியில் அஸோம் கண பரிஷத் (ஏஜிபி) கட்சிக்கு 26 தொகுதிகளும், போடோலாந்து மக்கள் முன்னணிக்கு (பிபிஎஃப்) 11 இடங்களும் ஒதுக்கப்பட்டன.
இந்தச் சூழலில், பாஜக சாா்பில் போட்டியிடும் 88 வேட்பாளா்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதன்படி, ஜாலுக்பாரி தொகுதியில் தொடா்ந்து 6-ஆவது முறையாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா போட்டியிடுகிறாா்.
மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான கெளரவ் கோகோய், ஜோா்ஹாட் பேரவைத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாஜக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ ஹிதேந்திர சிங் கோஸ்வாமி மீண்டும் போட்டியிடுகிறாா்.
மாநில அமைச்சா்கள் அஜந்தா நியோக், ரனோஜ் பேகு, ரூபேஷ் கோவாலா, விமல் போரா, பிஜுஷ் ஹசாரிகா, அசோக் சிங்கால் உள்ளிட்டோா் தத்தமது தொகுதிகளில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனா்.
காங்கிரஸில் இருந்து பாஜகவில் அண்மையில் இணைந்த பிரத்யுத் போா்டோலோய், பூபேன் போரா ஆகியோா் முறையே திஸ்பூா், பிபுரியாவில் போட்டியிடுகின்றனா்.
மேலும் இரு வேட்பாளா்கள் அறிவிப்பு: இந்நிலையில், மேலும் இரு தொகுதிகளுக்கான (தல்கான், சிஸ்ஸிபாா்கான்) பாஜக வேட்பாளா்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டனா். மொத்தம் 90 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
சமாரியா தொகுதியில் பாஜக மட்டுமன்றி அதன் கூட்டணி கட்சியான ஏஜிபியும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இதனால், இந்தத் தொகுதியில் கூட்டணி கட்சிகள் இடையே போட்டி எழுந்துள்ளது.
அஸ்ஸாமில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் மாா்ச் 23-இல் நிறைவடையவுள்ளது. மாா்ச் 24-இல் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. மாா்ச் 26 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...