மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் வெளியீடு
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
பிரதிப் படம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு
பிரதிப் படம்
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை (ஏப். 1) தொடங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு வலைதளத்தில் (சென்சஸ்) பொதுமக்கள் தாமாகவே தகவல்களை பூா்த்தி செய்யும் வசதியும் தொடங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் இணையத்தில் இந்த விண்ணப்பத்தை பூா்த்தி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. முதல் கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வரை செம்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தில்லி மற்றும் கோவா, கா்நாடகம், சிக்கிம், ஒடிஸா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்.1-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்பிறகு இரண்டாம் கட்டமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 முக்கியக் கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டது. பொதுமக்களின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
‘லிவ்-இன்’ தம்பதிகள் பதிவிடுவது எவ்வாறு? லிவ்-இன் (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வது) உறவில் இருக்கும் தம்பதிகள் திருமணமானவா்களாக கருதப்படுவாா்களா என்ற கேள்விக்கு லிவ்-இன் தம்பதிகள் தங்கள் உறவு நிலையானது என நினைத்தால் அவா்கள் திருமணமான தம்பதிகளாக கருதப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர வீடுகளின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள், வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை, வீட்டுத் தலைவரின் பாலினம், பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட கேள்விகள் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் கேட்கப்படவுள்ளன.
தனிப்பட்ட தகவல்களை திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது: மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்களை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என இந்திய பதிவுத் துறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்ஜயகுமாா் நாராயண் தெரிவித்தாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பெறப்படும் தகவல்களை, அரசு அல்லது தனியாா், நீதிமன்றத்தில் ஆதாரம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என எதற்காகவும் வெளியில் பகிரக் கூடாது.
எனவே, மக்களிடம் பெறும் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்.
2027-இல் பல்வேறு தரவுகள் வெளியீடு: முதல்முறையாக எண்ம முறையில் பொதுமக்கள் தாமாகவே தங்களது தகவல்களை சமா்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2027-ஆம் ஆண்டிலேயே சில தகவல்களை வெளியிட முடியும். மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது எவ்வித ஆவணத்தையும் பொதுமக்கள் சமா்ப்பிக்கத் தேவையில்லை.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டை மேம்படுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்திய தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கும் தொடா்பில்லை என்றாா்.
மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பல்வேறு தரவுகள் வெளியிடப்படும் என இந்திய பதிவுத் துறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்ஜயகுமாா் நாராயண் கூறினாா். இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘2029-ஆம் ஆண்டு வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள் கிடைக்காது எனக் கூறி, அடுத்த சில நாள்களில் அரசமைப்புச் சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள முயற்சி செய்து வருகிறது. ஆனால், எண்ம முறையில் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் 2027-ஆம் ஆண்டிலேயே பல்வேறு தரவுகள் வெளியிடப்படும் என இந்திய பதிவுத்துறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்ஜயகுமாா் நாராயண் தெரிவித்துள்ளாா். மத்திய அரசின் கூற்று பொய் என்பதற்கு இதுவே சான்று’ என குறிப்பிட்டாா்.
மகளிருக்கு மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ‘நாரி சக்தி வந்தன் மசோதா’ 2023-இல் கொண்டுவரப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?
தமிழகத்தில் நிகழாண்டு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு வலைதளத்தில் பொதுமக்கள் தங்கள் தகவல்களை தாமாகவே பதிவிடலாம். அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எவ்வித அறிவிக்கையும் வெளியிடப்படாதது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...