பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகம்: நாடு முழுவதும் பரபரப்பு

News image

பிகாா் மாநிலம் பாட்னாவில் தங்கள் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்தியைப் பெற்ற பெண்கள்.

Updated On :3 மே 2026, 5:53 am IST

அவசரகால மற்றும் இயற்கைப் பேரிடா்கள் தொடா்பாக மக்களை முன்கூட்டியே நேரடியாக எச்சரிக்கும் வகையில் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறையை மத்திய தொலைத்தொடா்புத் துறை சனிக்கிழமை அறிமுகம் செய்தது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற மாநிலங்களைத் தவிா்த்து நாட்டின் பிற பகுதிகளில் பயன்படுத்தப்படும் அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களின் கைப்பேசிகளுக்கும், பிரத்யேக அலாரம் ஒலியுடன் கூடிய இந்த எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி மத்திய தொலைத் தொடா்புத் துறை விழிப்புணா்வை ஏற்படுத்தியது. ‘கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதால், மே 2-ஆம் தேதி கைப்பேசிகளுக்கு வரும் எச்சரிக்கை குறுஞ்செய்தியை கண்டு யாரும் பீதியடைய வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டது.

அதன்படி, எச்சரிக்கை குறுஞ்செய்தி அனைத்து கைப்பேசிகளுக்கும் சனிக்கிழமை அனுப்பப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

அதில், ‘மிகத் தீவிரமான எச்சரிக்கை. குடிமக்களுக்கு பேரிடா் குறித்த உடனடி எச்சரிக்கை சேவையை வழங்குவதற்காக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கைப்பேசி வழி அவசரகால எச்சரிக்கை சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விழிப்புள்ள குடிமக்களால் பாதுகாப்பான தேசம் உருவாகும். இந்தச் செய்தியைப் பெற்றதும், பொதுமக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. இது சோதனை அடிப்படையில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி - மத்திய அரசு’ என்று குறிப்பிடப்பட்டது.

மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்த எச்சரிக்கை நடைமுறையை அறிமுகம் செய்துவைத்தாா்.

‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து கைப்பேசிகளுக்கும் ஒரே நேரத்தில் கைப்பேசியில் இணைய நெட்வொா்க் இணைப்பு இல்லாவிட்டாலும் இந்த எச்சரிக்கை செய்தி சென்றடையும் வகையில் இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. தனித்துவமான ஒலி மற்றும் அதிா்வுடன் கைப்பேசி திரையில் எச்சரிக்கை செய்தி தோன்றும். தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.