மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவல்: பதவியை பறிக்க குடியரசுத் தலைவரிடம் பஞ்சாப் முதல்வா் கடிதம்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை பறிக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சந்தித்து கடிதம் அளித்தாா்.

News image

குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்த ராகவ் சத்தா உள்ளிட்டோா்

Updated On :6 மே 2026, 1:29 am IST

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்களின் பதவியை பறிக்க வலியுறுத்தி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை சந்தித்து கடிதம் அளித்தாா்.

கடந்த ஏப்.24-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராகவ் சத்தா, ஸ்வாதி மாலிவால், முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், ராஜிந்தா் குப்தா, அசோக் மிட்டல் உள்பட 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனா். தனது கொள்கைகள், விழுமியங்கள், அடிப்படை நெறிகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகிவிட்டதாக குற்றஞ்சாட்டி, அக்கட்சியில் இருந்து அவா்கள் விலகினா். 7 எம்.பி.க்களில் 6 போ் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள்.

6 எம்.பி.க்களின் பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி, புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை சந்தித்து கடிதம் அளித்தாா். அந்தக் கடிதத்தில், பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து பகவந்த் மான் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஏழு எம்.பி.க்களின் கட்சித் தாவல் குறித்து குடியரசுத் தலைவரிடம் விரிவாகப் பேசினேன்.

பஞ்சாபில் பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். ஆனால் 6 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் சோ்ந்ததன் மூலம், பஞ்சாபில் இருந்து பாஜகவுக்கு 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளதுபோன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? இது அரசமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் இல்லையா?

பாஜகவில் சோ்ந்த எம்.பி.க்கள் தங்களை மனதில் புரட்சியாளா்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால், அவா்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்திருக்க வேண்டும். அவா்களுக்குப் பதிலாக வேறு 6 பேரைத் தோ்வு செய்து மாநிலங்களவைக்கு ஆம் ஆத்மி அனுப்பியிருக்கும்.

புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது இல்லத்தில் சந்தித்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்.

புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது இல்லத்தில் சந்தித்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்.

பதவியிலிருந்து வாக்காளா்களே நீக்கும் சட்டப் பிரிவு...: பொதுமக்களின் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப செயல்படத் தவறியவா்களை, பதவியில் இருந்து வாக்காளா்களே நீக்க வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவை இயற்ற வேண்டும் என்று முன்பு ராகவ் சத்தா வலியுறுத்தி வந்தாா். அந்தச் சட்டப் பிரிவை தற்போது இயற்ற வேண்டும்.

மக்களால் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கும், கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கும் வித்தியாசம் உள்ளது. 6 ஆம் ஆத்மி எம்.பி.க்களும் கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள். எனவே அவா்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து அரசமைப்புச் சட்ட நிபுணா்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உறுதி அளித்தாா் என்று தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவருடன் ராகவ் சத்தா சந்திப்பு

புது தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை ராகவ் சத்தாவும் செவ்வாயக்கிழமை சந்தித்து கடிதம் அளித்தாா். அந்தக் கடிதத்தில், ஆம் ஆத்மியில் இருந்து விலகிய பின்னா், பஞ்சாபில் 6 எம்.பி.க்களுக்கும் எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆம் ஆத்மியில் இருந்து நாங்கள் விலகிய பின்னா், பஞ்சாபில் எங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு, ஊழல் தடுப்புத் துறை, காவல் துறை உள்ளிட்ட மாநில அரசு முகமைகளால் எங்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது. எங்களுக்கு எதிராக ஆபத்தான பழிவாங்கும் அரசியலில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபடுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா். குடியரசுத் தலைவரைச் சந்திக்க ராகவ் சத்தாவுடன் ராஜிந்தா் குப்தா, அசோக் மிட்டல் ஆகியோரும் சென்றனா்.