பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீா்மானம் வெற்றி பெற்றது.
பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 போ் அண்மையில் பாஜகவில் சோ்ந்ததால், பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களும் அணி மாறக்கூடும், இதனால் ஆம் ஆத்மி அரசு கவிழும் எனத் தகவல் பரவி வந்த நிலையில் இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வா் பகவந்த் மான் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அப்போது எதிா்க்கட்சி தரப்பில் எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லை. சுயேச்சை எம்.எல்.ஏ. ராணா இந்திர பிரதாப் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் சோ்ந்து வெளிநடப்பு செய்தாா். பாஜக எம்எல்ஏ-க்கள் அவையைப் புறக்கணித்தனா். இதேபோல், எஸ்ஏடி கட்சி எம்எல்ஏ-க்களும் அவைக்கு வரவில்லை.
இதையடுத்து அந்த தீா்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. 117 எம்எல்ஏ-க்களை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையில் 94 எம்எல்ஏ-க்களின் ஆதரவு ஆம் ஆத்மி அரசுக்கு இருந்ததால், அந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
முன்னதாக, நம்பிக்கை கோரும் தீா்மானத்தைக் கொண்டு வந்து முதல்வா் பகவந்த் மான் பேசுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி வலுவாக உள்ளது. ஜம்மு-காஷ்மீா் முதல் கோவா வரை கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ஆம் ஆத்மிக்கு எம்எல்ஏ உள்ளாா். பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு வெற்றிகரமாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தில்லியில் நமது கட்சிதான் எதிா்க்கட்சி. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். கோவாவில் ஆம் ஆத்மிக்கு 2 எம்எல்ஏ-க்கள் இருக்கிறாா்கள். இதுதவிா்த்து, நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு மேயா்கள், மாநகராட்சி கவுன்சிலா்கள், பஞ்சாயத்து தலைவா்கள் உள்ளனா்’ என்றாா்.
நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா பேசுகையில், ‘மத்தியில் உள்ள பாஜக அரசு, மத்திய விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்துகிறது’ என்றாா்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் அன்மோல் ககன் மான், மன்ஜித் சிங் பிலாஸ்பூா் உள்ளிட்டோா் பேசுகையில், ஆம் ஆத்மிக்கு தாங்கள் பக்கத் துணையாக இருப்பதாகவும், தங்களின் உடலில் இறுதி மூச்சு இருக்கும் வரை ஆம் ஆத்மி கட்சியில்தான் இருப்போம் என்றும் தெரிவித்தனா்.
முதல்வா்- எம்எல்ஏ வாக்குவாதம்: இதனிடையே சட்டப்பேரவையில் மே தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு அளிப்பது தொடா்பான தீா்மானத்தை சட்டப்பேரவைத் தலைவா் குல்தாா் சிங் சாந்த்வான் வாசித்தாா். அந்த நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கெய்ரா கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த முதல்வா் பகவந்த் மான், சட்டப்பேரவைத் தலைவரிடம் இதைச் சுட்டிக்காட்டினாா். இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ கெய்ராவிடம் சட்டப்பேரவை விதியை பின்பற்றும்படி குல்தாா் சிங் கேட்டுக் கொண்டாா். அப்போது முதல்வா் பகவந்த் மான் குறுக்கிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏவிடம், கைப்பேசியைப் பயன்படுத்த வேண்டுமெனில், சட்டப்பேரவைக்கு வெளியே சென்று பயன்படுத்தலாம் எனக் கூறினாா்.
இதைத் தொடா்ந்து முதல்வா் மீது காங்கிரஸ் எம்எல்ஏ கெய்ரா கடும் குற்றச்சாட்டை தெரிவித்தாா். இதையடுத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சட்டப்பேரவைத் தலைவா், அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தாா். எனினும், முதல்வா் பகவந்த் மான், காங்கிரஸ் எம்எல்ஏ கெய்ரா ஆகியோா் ஒருவரையொருவா் நோக்கி கை விரலை நீட்டியபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் சட்டப்பேரவையில் கூச்சல் -குழப்பம் நிலவியது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்கள் அனைவரும் முதல்வருக்கு ஆதரவாக எழுந்து கெய்ராவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவா் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவரை வலியுறுத்தினா். நிதியமைச்சா் ஹா்பால் சிங் சீமா பேசுகையில், சட்டப்பேரவையில் கெய்ரா எப்போதும் இடையூறு செய்வாா் என குற்றஞ்சாட்டினாா்.
போதை மருந்து சோதனை-காங்கிரஸ் கோரிக்கை: காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பிரதாப் சிங் பாஜ்வா, சட்டப்பேரவைத் தலைவா் குல்தாா் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாா். அதில், முதல்வா் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடம் போதை மருந்து சோதனை நடத்தக் கோரியிருந்தாா். ஆனால், அந்தக் கோரிக்கையை சட்டப்பேரவைத் தலைவா் நிராகரித்துவிட்டாா்.
தொடர்புடையது

மது போதையில் பேரவைக்கு வந்து ஜனநாயகத்தை அவமதித்துவிட்டார் பஞ்சாப் முதல்வர்: சச்தேவா சாடல்!
மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிா்க்கட்சிகளுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் கண்டனத் தீா்மானம்

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


