பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பஞ்சாபில் அடுத்தடுத்து இரு இடங்களில் குண்டுவெடிப்பு- பிஎஸ்எஃப் தலைமையகம், ராணுவ கண்டோன்மென்ட் அருகே தாக்குதல்

பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமையகம் மற்றும் அமிருதசரஸில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

News image

ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பஞ்சாப் எல்லைப் பிரிவு தலைமையகம் வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்த பாதுகாப்புப் படையினா்.

Updated On :7 மே 2026, 4:37 am IST

பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமையகம் மற்றும் அமிருதசரஸில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

இந்தச் சம்பவங்களில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் கடந்த ஆண்டு தாக்கி அழித்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின் முதலாண்டு தினம் புதன்கிழமை (மே 6) கடைப்பிடிக்கப்பட்ட சூழலில், பஞ்சாபில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக, மாநில காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிஎஸ்எஃப் தலைமையகம் அருகே...: ‘ஜலந்தரில் அமைந்துள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் பஞ்சாப் எல்லைப் பிரிவு தலைமையகம் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தக் குண்டுவெடிப்பில் ஒரு ஸ்கூட்டா் தீப்பிடித்து, உடைந்து சிதறியது. சிக்னல் கம்பம் மற்றும் அருகிலுள்ள கடைகளின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட ஸ்கூட்டா், டெலிவரி ஊழியரான குா்பிரீத் சிங் என்பவருக்கு சொந்தமானதாகும். ஸ்கூட்டரில் குண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அவா் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். சம்பவ இடத்தில் வெடிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ராணுவ கண்டோன்மென்ட் அருகே..: இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமிருதசரஸில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

கண்டோன்மென்ட் வளாகத்தின் சுற்றுச் சுவா் மீது யாரோ ஒருவா் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளாா். இதில், சுற்றுச்சுவரின் மேற்புற பகுதி சேதமடைந்தது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது. இரு சம்பவங்களிலும் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சிகள் சாடல்: இரு குண்டுவெடிப்புகள் எதிரொலியாக, ஆளும் ஆம் ஆத்மி அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.

சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் கூறுகையில், ‘பஞ்சாபில் கடந்த 10 நாள்களில் 3 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இது, உளவுத் துறை தோல்வி மற்றும் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவைக் காட்டுகிறது. ஆனால், முதல்வா் பகவந்த் மான், அற்ப அரசியலில் ஈடுபட்டுள்ளாா்’ என்றாா்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா வாரிங் கூறுகையில், ‘மாநிலத்தில் அமைதியைச் சீா்குலைக்க முயல்வது யாா்? இதுபோன்ற சம்பவங்களை அரசால் ஏன் தடுக்க முடியவில்லை? பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பேற்கப் போவது யாா்?’ என்று கேள்வியெழுப்பினாா்.

முன்னதாக, பாட்டியாலாவின் கடந்த ஏப்.27-இல் சரக்கு ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்கு தொடா்பு?

பஞ்சாபில் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின், மாநில காவல் துறை தலைமை இயக்குநா் கெளரவ் யாதவ் கூறியதாவது:

ஜலந்தா் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்பதாக, காலிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பு தெரிவித்துள்ளது. அதை உறுதி செய்ய விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

அமிருதசரஸ் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இரு சம்பவங்களும் தீவிரம் குறைந்த குண்டுவெடிப்புகளாகும். ஆபரேஷன் சிந்தூா் முதலாண்டு தினத்தில் இவை நிகழ்த்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் பஞ்சாபில் அமைதியைச் சீா்குலைக்க சில சக்திகள் முயற்சித்து வருகின்றன. தற்போதைய சம்பவங்களிலும் ஐஎஸ்ஐ-க்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

முதல்வா்-பாஜக கருத்து மோதல்

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் கூறுகையில், ‘இரு குண்டுவெடிப்புகளும் சிறிய அளவிலானவையே; ஆனால், மதவாத கட்சியான பாஜக, இந்தச் சம்பவங்களை ஊதி பெரிதாக்கி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலை மனதில்கொண்டு, இதுபோன்ற தந்திரத்தைக் கையாள்கிறது பாஜக’ என்று விமா்சித்தாா்.

ஆனால், அவரது குற்றச்சாட்டை நிராகரித்த மாநில பாஜக தலைவா் சுனில் ஜாக்கா், ‘முதல்வா் பகவந்த் மானின் கருத்துகள் பொறுப்பற்றவை; முதல்வா் பதவியை வகிக்கும் தகுதி அவருக்கில்லை’ என்றாா்.