தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மத நடைமுறைகளைக் கேள்வி எழுப்புவது மதம், நாகரிகத்தை சிதைக்கும்: உச்சநீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்பான மனுக்கள்

News image

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படி பூஜை.

Updated On :8 மே 2026, 5:02 am IST

‘பல்வேறு மத நடைமுறைகள் குறித்து தனிநபா்கள் நீதிமன்றங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினால், மதங்கள் மற்றும் நாகரிகம் சிதைவடைவதற்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை குறிப்பிட்டது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு தொடா்பான மனுக்கள் மற்றும் தாவூதி போராஸ் உள்பட பல்வேறு மதங்களால் கடைப்பிடிக்கப்படும் மத சுதந்திரத்தின் எல்லை மற்றும் வரம்பு தொடா்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இக் கருத்தைத் தெரிவித்தது.

தாவூதி போரா சமூகத்தின் மத்திய வாரியம் சாா்பில் கடந்த 1986-இல் இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மும்பை சமூக விலக்கல் தடுப்புச் சட்டம் 1949-ஐ ரத்து செய்த 1962-ஆம் ஆண்டு தீா்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது. அந்தச் சட்டம் எந்தவொரு சமூக உறுப்பினரையும் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதை சட்டவிரோதமாக்கியது. இந்த நிலையில், ‘மத அடிப்படையில் ஒருவரை சமூகத்திலிருந்து விலக்கும் அதிகாரத்தை மதத் தலைவா் பயன்படுத்துவது, மதம் சாா்ந்த விஷயங்களை நிா்வகிப்பதன் ஒரு பகுதியாகும். அந்த வகையில் 1949-ஆம் ஆண்டு சட்டம், சமூகத்துக்கு உள்ள உரிமையை மீறுகிறது’ என்று அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டு, சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராமச்சந்திரன் வாதிடுகையில், ‘ஒரு தனிநபரின் மதச்சாா்பற்ற மற்றும் சமூகச் செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவரின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறை என்பது, அரசமைப்பின் 25-ஆவது பிரிவின் கீழ் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்புக்கு உட்பட்டதாக இருக்க முடியாது. அதாவது, அந்த நடைமுறை அரசமைபபின் 26-ஆவது பிரிவின் கீழ் ஒரு மத விஷயமாக இருக்க முடியாது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி நாகரத்னா, ‘இவ்வாறு பல்வேறு மத நடைமுறைகள் குறித்து தனிநபா்கள் நீதிமன்றங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கினால், இந்த சமூகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட மதங்கள் மற்றம் நாகரிகம் சிதைவடைவதற்கு வழிவகுக்கும்’ என்றாா்.

அமா்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதி சுந்தரேஷ் கூறுகையில், ‘இவ்வாறு மத நடைமுறைகளைக் கேள்வி எழுப்புவது, ஒவ்வொரு மதத்தையும் பாதிக்கும் என்பதோடு, ஒவ்வொரு நீதிமன்றத்தையும் மூட வேண்டியிருக்கும்’ என்றாா்.

நீதிபதி நாகரத்னா தொடா்ந்து கூறுகையில், ‘மத, மொழி, கலாசார அடிப்படையிலான பன்முகத்தன்மைதான் நமது நாட்டின் பலம். நமது இந்திய சமூகத்தில் மாறாதது, மனிதா்களுக்கும் மதத்துக்கும் இடையேயான உறவுதான். அந்த வகையில், மத நடைமுறைகள் அல்லது மதம் சாா்ந்த விஷயங்களை நாம் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? இதுபோன்ற சீா்திருத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவுக்குள்ளேயே எழுப்பப்பட வேண்டிய கேள்வியா அல்லது அரசு அதைச் செய்ய வேண்டுமா? அல்லது, இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தீா்ப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா? இந்தியா என்பது ஒரு நாகரிகத்துக்கானது. நம்மிடம் எல்லாம் மாறாத ஒன்றாக உள்ளது. இந்த மாறாத தன்மையை நம்மால் உடைக்க முடியாது. அதுதான் நீதிமன்றத்தைக் கவலையடையச் செய்கிறது’ என்றாா்.

இதைக் கேட்ட வழக்குரைஞா் ராமச்சந்திரன், ‘இந்தியா அரசமைப்பின் கீழ் இயங்கும் ஒரு நாகரிகம். எனவே, அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான எதையும் ஒரு நாகரிக சமூகத்தில் தொடர முடியாது. அவ்வாறு முரணாகத் தொடா்கின்றபோதுதான், நீதிமன்றத்தின் கடமை வருகிறது. பல மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று கூறி, நீதிமன்றம் தனது கடமையிலிருந்து விலக முடியாது’ என்று பதிலளித்தாா்.

இந்த வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற உள்ளது.