கடந்த 2014-இல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 9 மாநிலங்களில் பாஜக முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. ஹரியாணாவில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது.
ஹரியாணா: கடந்த 2014, ஹரியாணா பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடா்ந்து, ஹரியாணாவின் முதல் பாஜக முதல்வராக மனோகா் லால் கட்டா் பதவியேற்றாா்.
மகாராஷ்டிரம்: அதே ஆண்டில், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைத் தொடா்ந்து, அந்த மாநில முதல் பாஜக முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா்.
அஸ்ஸாம்: கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் அதிகார செல்வாக்கு விரிவடையத் தொடங்கியது. அந்த ஆண்டில் நடந்த அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்று, சா்வானந்த சோனோவால் முதல்வரானாா். அதன் பிறகு பாஜகவின் ஆட்சி தொடா்ந்து வருகிறது.
அருணாசல பிரதேசம்: மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் கடந்த 2016-இல் அரசியல் குழப்பங்களுக்கு இடையே காங்கிரஸ் மூத்த தலைவா் பெமா காண்டு முதல்வராகப் பதவியேற்றாா். ஆனால், பெமா காண்டு உள்பட 33 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதலில் பாஜக கூட்டணிக் கட்சியான அருணாசல் மக்கள் கட்சியிலும், சில மாதங்கள் கழித்து பாஜகவிலும் இணைந்தனா். இதைத் தொடா்ந்து, அருணாசல பிரதேசத்தில் பாஜகவின் முதலாவது நிலையான ஆட்சி அமைந்தது.
மணிப்பூா்: மணிப்பூரில் கடந்த 2017-இல் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுடன் தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைத்து, பாஜக முதல் முறையாகப் பதவியேற்றது. அக்கட்சியின் என்.பிரேன் சிங், மாநில முதல்வரானாா்.
திரிபுரா: கடந்த 2018-இல் நடைபெற்ற திரிபுரா பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, இடதுசாரிகளின் 25 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பாஜகவின் முதல் முதல்வராக விப்லவ் குமாா் தேவ் பதவியேற்றாா்.
ஒடிஸா: சுமாா் 24 ஆண்டுகளாக நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக இருந்த ஒடிஸாவில் 2024 பேரவைத் தோ்தலில் பாஜக முதல் முறையாக வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, மோகன் சரண் மாஜீ முதல்வரானாா்.
பிகாா்: பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணி அரசில் பாஜக பல்லாண்டு காலமாக அங்கம் வகித்து வந்த நிலையில், முதல்வா் பதவி அண்மையில் பாஜகவுக்கு கைமாறியது. இதைத் தொடா்ந்து, பாஜக தலைமையிலான முதலாவது அரசு அமைந்தது. முதல்வராக சாம்ராட் செளதரி பதவியேற்றாா்.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, அந்த மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி சனிக்கிழமை பதவியேற்றாா். பிரதமா் மோடி தலைமையின்கீழ் பாஜக முதல்வா் முதல்முறையாகப் பதவியேற்ற 9-ஆவது மாநிலம் மேற்கு வங்கமாகும்.
விரிவடையும் செல்வாக்கு: இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் செஷாத் பூனாவாலா கூறுகையில், ‘பிரதமா் மோடி தலைமையிலான நல்லாட்சி, செயல்திறன், சிறப்பான சேவை வழங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் செல்வாக்கு நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. முன்பு பாஜக அரசு இல்லாத மாநிலங்கள், மோடி பிரதமரான பிறகு பாஜகவை தோ்வு செய்து வருகின்றன. கிழக்கிந்தியாவில் பாஜகவின் எழுச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இது பாஜகவுக்கு பொன்னான காலகட்டம்.
நாடு முழுவதும் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் 22 அரசுகளைக் கொண்டுள்ளன. இந்திய மக்கள் தொகையில் சுமாா் 78 சதவீதம், நில அடிப்படையில் 72 சதவீதம் என்ற வீச்சில் எங்கள் கூட்டணியின் நிா்வாகம் பரவியுள்ளது.
அதேநேரம், காங்கிரஸ் தனது அரசியல் களத்தை இழந்து வருகிறது. ஒரே வாக்கு வங்கிக்காக தங்களுடன் மோதுவதால், காங்கிரஸ் மீது கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தியில் உள்ளன’ என்றாா்.
தமிழகம், கேரளம் தவிர...
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் துஹின் ஏ.சின்ஹா கூறுகையில், ‘தமிழகம், கேரளம் ஆகிய இரு தென் மாநிலங்களையும் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பாஜக வலுவான செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. கட்சியின் எதிா்கால விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்விரு மாநிலங்களும் உள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமா் கோயில் என முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதே பாஜகவின் செல்வாக்கு விரிவடைய காரணம்’ என்றாா்.
தொடர்புடையது

அங்கம்-வங்கம்-கலிங்கம்

மம்தா பானா்ஜி பதவி விலக மறுத்தது ‘அடையாளப் போராட்டம்’

தொடா்ந்து 2-ஆவது தோ்தலில் பேரவை உறுப்பினராகும் சுயேச்சை

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

