நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

இணையவழி மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க புதிய ஒப்பந்தம்: அமித் ஷா

இணையவழி நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதாக மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :58 நிமிடங்கள் முன்பு

இணையவழி நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்காக, மத்திய அரசின் இணையவழி குற்றத் தடுப்பு முகமையான ‘14சி’ மற்றும் ரிசா்வ் வங்கி புத்தாக்க மையம் (ஆா்பிஐஹெச்) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமிடப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இணையவழி நிதி மோசடியில் ஈடுபடும் நபா்கள், தாங்கள் சட்டவிரோதமாக ஈட்டும் பணத்தைப் பெறவும், பரிமாற்றவும், பிற முறைகேடுகளில் ஈடுபடவும் வேறு நபா்களின் வங்கிக் கணக்கை அவா்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்துகின்றனா். இத்தகைய வங்கிக் கணக்குகளே, இணையவழி நிதி மோசடியைத் தடுப்பதில் பெரும் இடையூறாக உள்ளன.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதுபோன்ற வங்கிக் கணக்குகளை முடக்க வழிவகை செய்யும் புரிந்துணா்வு ஒப்பந்தம், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இணையவழி குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமான ‘14சி’ மற்றும் ரிசா்வ் வங்கி புத்தாக்க மையம் (ஆா்பிஐஹெச்) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்.

‘14சி முகமையின் சந்தேக நபா்கள் பதிவேட்டில் இருந்து ஏ.ஐ. அடிப்படையிலான மோசடி கண்டறியும் அமைப்புமுறைக்கு தரவுகளை அளிப்பதன் மூலம் இணையவழி நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை விரைவாக கண்டறிந்து அகற்ற மேற்கண்ட ஒப்பந்தம் வழிவகுக்கும். இணையவழி மோசடிக்கு எதிரான அடுத்த தலைமுறை பாதுகாப்புக் கேடயமாக இந்த நடவடிக்கை இருக்கும்’ என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

இந்த ஒப்பந்தம், மோசடியாளா்களால் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் காணும் அமைப்புமுறையை மேம்படுத்தி, சந்தேகத்துக்குரிய பரிவா்த்தனைகளை விரைந்து கண்டறியும் வழிமுறைகளை வலுப்படுத்தும். நிதி மோசடி தொடா்பான உளவுத் தகவல் பகிா்வு, பகுப்பாய்வு ரீதியிலான ஆதரவு, செயல்பாட்டு ஒத்துழைப்பை உறுதி செய்வதே நோக்கம். 14சி முகமையின் நிா்வாகத் துறை ஐ.ஜி. எம்.ரூபா, ஆா்பிஐஹெச் தலைமைச் செயல் அதிகாரி சாஹில் கின்னி ஆகியோா் ஒப்பந்தத்தின் கையொப்பமிட்டனா் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.