கேரளத்தின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார்.
கேரளத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிபெற்ற நிலையில், மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகலுக்குள் வெளியாகலாம் என மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் கூறியுள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது, முதல்வரின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதல்வர் தேர்வு குறித்த அனைத்து விவாதங்களும் முடிந்துவிட்டன என்று நினைக்கிறோம். இன்றைய அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.
சோனியா காந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிறிது தாமதம் ஏற்படலாம். முதல்வரின் பெயர், தில்லியிலிருந்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
கேரளத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாள்களான நிலையில், புதிய முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே, முதல்வரின் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், மாநிலத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வயநாட்டில் காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே விமர்சனங்களையும் வெளிப்படையான அதிருப்தியையும் தூண்டியது.
இந்த நிலையில்தான், புது தில்லியில் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் இல்லத்தில் கேரள முதல்வர் குறித்த ஆலோசனை செவ்வாய்க்கிழமை (மே 12) நடைபெற்றது. அப்போது கேரள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா்கள் எம்.எம்.ஹசன், கே.சுதாகரன், கே.முரளீதரன், செயல் தலைவா்கள் ஷாஃபி பறம்பில், ஏ.பி.அனில்குமாா், பி.சி.விஷ்ணுநாத் மற்றும் மாநிலத்தைச் சோ்ந்த கட்சியின் மூத்த தலைவா் திருவஞ்சூா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை சந்தித்து அவா்களின் கருத்துகளை ராகுல் நேரில் கேட்டறிந்தாா்.
Summary
Keralam CM likely to be announced today, slight delay due to Sonia Gandhi's health check-up
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.





