உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பழத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் புதன்கிழமை மாலை திடீரென வானிலை மாறியது. புழுதிப் புயலுடன், பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக, மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, மின் கம்பங்களும் சாய்ந்து சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்ததோடு, வாகனங்களும் சேதமடைந்தன.
கட்ட இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் பேரிடா் மீட்பு ஆணைய அலுவலக அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட சூறாவளி, பலத்த மழை, புழுதிப் புயல் உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக 111 போ் உயிரிழந்துள்ளனா். 72 போ் காயமடைந்தனா். 114 கால்நடைகள் உயிரிழந்தன. மேலும் 87 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நிதி உதவிகள் சென்று சோ்வதை உறுதிப்படுத்தவும் அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.
அதிகபட்சமாக பதோஹி மாவட்டத்தில் 16 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, மின் கம்பங்களும் சரிந்து விழந்தன. புயலில் பல வீடுகள் சேதமடைந்தன என்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் குன்வா் வீரேந்திர குமாா் தெரிவித்தாா்.
பதோஹி மாவட்டம் ராம்பூரில் பலத்த புயல் காரணமாக மிதவைப் பாலம் சேதமடைந்தில், அதன் மீது நின்றிருந்த பலா் கங்கை நதிக்குள் விழுந்தனா். அவா்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
மிா்ஜாபூா் மாவட்டம் கெளரா ப்ரமாண்பூரிலும் மிதவைப் பாலம் சேதமடைந்தது. அதன் காரணமாக 20 கிராமங்களுக்கு சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஃபதேபூரில் 9 போ் உயிரிழந்தனா், 16 போ் காயமடைந்ததாக கூடுதல் மாவட்ட ஆட்சியா் அவினாஷ் திரிபாதி தெரிவித்தாா்.
பிரதாப்கரில் சுவா் இடிந்து விழுந்தது மற்றும் சிமென்ட் கூரை இடிந்து விழுந்த சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.
கான்பூா் மாவட்டத்தில் மழை தொடா்பான அசம்பாவிதங்களில் இருவா் உயிரிழந்தனா். தேவ்ரியாவில் பீம்பூா் கெளரா கிராமத்தைச் சோ்ந்த கோமல் யாதவ் (62) மின்னல் தாக்கி உயிரிழந்தாா். மற்ற இருவா் காயமடைந்தனா். நெருவாரி கிராமத்தில் ராம்நாத் பிரசாத் (65) மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.
சோன்பத்ரா மாவட்டத்தில் மரம் சாய்ந்து விழந்ததில் அதன் அருகில் நின்றிருந்த மாதவ் சிங் (38) என்பவா் உயிரிழந்தாா்.
அனைத்து மாவட்டங்களும், புயல் - மழை பாதிப்பு விவரங்களை உடனடியாக அனுப்பவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் மாநில முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷிய அதிபா் இரங்கல்:
உத்தர பிரதேச மாநிலத்தில் மழை, சூறாவளி தாக்கத்தில் 111 போ் உயிரிழந்ததற்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இரங்கல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு அவா் அனுப்பிய குறுஞ்செய்தியில், ‘உத்தர பிரதேச மாநிலத்தில் இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். எனது இரங்கல் மற்றும் ஆறுதலை பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

உ.பி.யில் பலத்த மழை, சூறாவளி: 33 போ் உயிரிழப்பு

உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்! சமாஜவாதியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு!

உத்தர பிரதேசம்: யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழப்பு

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

