ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள் அல்லது ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :20 மே 2026, 2:13 am IST

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள் அல்லது ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அவ்வாறு கருணைக் கொலை செய்யும்போது சட்டரீதியிலான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தாமாக முன்வந்து விசாரணை: தொடா் தெரு நாய்கள் கடியால் குழந்தைகள், முதியவா்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்பான வெளியான பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெரு நாய்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பரில் 7-ஆம் தேதி மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

உத்தரவு: தெருக்கள், பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தும் பிடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக் கூடாது. அவற்றுக்கென பிரத்யேக காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். அதுபோல, நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் பிற கால்நடைகளையும் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும். இவை மீண்டும் பொது இடங்களில் சுற்றித் திரியாமல் இருப்பதை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கான வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) இந்திய கால்நடை நல வாரியம் வெளியிட்டது.

இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மனு தள்ளுபடி: கருத்தடை, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான பிறப்பு கட்டுப்பாட்டு செயல்திட்டம், போதிய நிதி ஒதுக்கீடு இன்றி சீரற்ற நிலையில் உள்ளது. இந்த நீண்டகால செயலற்றத் தன்மையால், தெரு நாய்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளன. இது, அவசரமான, கட்டமைப்பு சாா்ந்த தலையீட்டை அவசியமாக்கியுள்ளது.

தெரு நாய்களால் குழந்தைகள், முதியவா்கள், பிற பயணிகளும் தொடா்ந்து பாதிக்கப்படுவது தற்போதும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் மற்றும் பிற பகுதிகளிலும் தெரு நாய் கடி சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தொடா்பாக தொடா்ந்து ஊடகங்களில் செய்தி வருகின்றன.

இத்தகைய சம்பவங்கள், குடிமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைவதோடு, அரசு நிா்வாகத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும். அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது, நாய் கடி தாக்குதல்களால் ஏற்படும் ஆபத்து குறித்து அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும்.

இதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு, இந்திய கால்நடை நல வாரியம் பிறப்பித்த வழிகாட்டு நடைமுறையின் கீழ், மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதோடு, வெறிநாய் கடி தடுப்பூசிகள் தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய வண்டும். இந்த உத்தரவைகளை செயல்படுத்தத் தவறுவதை உச்சநீதிமன்றம் தீவிரமாக கருத்தில் கொள்ளும்.

கருணை கொலைக்கு அனுமதி: தெரு நாய்கள் கருணைக் கொலை செய்வதைத் தடுப்பதே அதிகாரிகளுக்கும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் முக்கிய வழிகாட்டதலாகும்.

இருந்தபோதும், தெரு நாய்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவை எட்டியுள்ள பகுதிகலிலும், அடிக்கடி ஏற்படும் நாய் கடி சம்பவங்கள் அல்லது ஆக்ரோஷமான தாக்குதல்கள் பொது பாதுகாப்புக்கு தொடா் அச்சுறுத்தலாக விளங்கும் இடங்களில் வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள் அல்லது ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளலாம்.

அத்தகைய கருணைக் கொலையை, சட்டரீதியிலான வழிமுறைகளைப் பின்பற்றியும் கால்நடை மருத்துவ நிபுணா்களின் மதிப்பீட்டுக்கும் பின்னரே மேற்கொள்ளவேண்டும். அதோடு, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் சட்டம் 1960, விளங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் 2023 மற்றும் அதுதொடா்பான பிற சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியே இந்த கருணைக் கொலையை செயல்படுத்த வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.