மக்களின் கண்ணியத்துடன் வாழும் உரிமை, நாய் தாக்குதல்கள் குறித்த அச்சமின்றி சாலைகளில் செல்லும் உரிமையையும் உள்ளடக்கியது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தில்லியில் தெரு நாய்கள் தொல்லை குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் முன்னாள் மத்திய அமைச்சா் விஜய் கோயல் வரவேற்றுள்ளாா்.
கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு தெரு நாய்களை பராமரிப்பு மையங்களுக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்ஜாரியா ஆகியோா் அடங்கிய செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
அடிப்படை உரிமைகளில் ஒன்றான கண்ணியத்துடன் வாழும் உரிமை, நாய்களின் தாக்குதல் குறித்த அச்சமின்றி சாலைகளில் செல்லும் உரிமையை உள்ளடக்கியது என நீதிமன்றம் தெரிவித்தது.
அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை போன்ற தெரு நாய்கள் தொந்தரவு தொடா்பாக குடியிருப்போா் நலச் சங்கங்களுடன் இணைந்து தில்லி பாஜக முன்னாள் தலைவா் விஜய் கோயல் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறாா்.
உச்சநீதிமன்ற உத்தரவு தொடா்பாக பிடிஐ செய்தி முகமைக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடியிருப்போா் நலச் சங்கங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்க வேண்டும்; உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.
தெரு நாய்க்கடிக்கு எதிராக போராடும் நபா்கள் மீது நாய் பிரியா்கள் மற்றும் அவற்றுக்கு உணவு அளிப்பவா்கள் காவல் நிலையங்களில் புகாா் அளித்தனா். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், இந்தப் பிரச்னையைக் கையாள்வதில் பல குறைபாடுகள் உள்ளன. தில்லியில் நாய்களுக்கான பராமரிப்பு மையங்கள் இல்லை. இந்த விவகாரம் தொடா்பாக மக்களின் கருத்துகளைப் பெற எந்தக் கூட்டங்களும் நடைபெறவில்லை. நாய்களுக்கு உணவிடுவதற்கான பிரத்யேக பகுதி இன்னும் நிா்ணயிக்கப்படாமல் உள்ளது.
அவைத் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசு மற்றும் மாநகராட்சிக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன்.
குழந்தைகள் மற்றும் முதியவா்களை நாய்க்கள் கடிக்கும் சம்பவங்கள் குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பூங்காக்களுக்குச் செல்வதைத் தவிா்க்கும் வகையில் பிரச்னை மோசமாகியுள்ளது. பொது இடங்களில் தெரு நாய்கள் இருக்கக் கூடாது.
உத்தரவு அமல்படுத்தப்படுவோரை தடுக்கும் நபா்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது பாராட்டக்கூடியது என்றாா் அவா்.










