இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
சமீப ஆண்டுகளில், இருநாட்டு உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்துடன் விரிவடைந்து, ஒரு சுமுகமான நட்பிலிருந்து, சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகிய மாண்புகளையும், எதிர்காலத்திற்கான ஒரு பொதுவான பார்வையையும் அடிப்படையாகக் கொண்ட சிறப்பு மிக்க உத்திசார் கூட்டாண்மையாகப் பரிணமித்துள்ளன.
சர்வதேச அமைப்புமுறை ஓர் ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகி வரும் இந்தக் காலகட்டத்தில், இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை, நமது பொருளாதார ஆற்றல், சமூகப் படைப்பாற்றல் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகால நாகரிக ஞானம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு புதிய மற்றும் உயர்ந்த பரிமாணத்தையும் பெற்று வருகிறது.
புதிய இலக்குகளை அடைவதற்கும், இருநாடுகளின் பரஸ்பர ஆற்றல்களை ஒன்றிணைப்பதற்கும், இருதரப்பு உறவை ஆழப்படுத்தவும் பல்வகைப்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஒரு தொழில்துறை வல்லரசாக இத்தாலியின் நிலையைப் பிரதிபலிக்கும் வகையில், இத்தாலிய வடிவமைப்பு, உற்பத்தித் திறன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கும், நூறுக்கும் மேற்பட்ட அதிக முதலீடு கொண்ட யூனிகார்ன் நிறுவனங்கள் மற்றும் 2,00,000 புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சி, பொறியியல் திறமை, அதன் பரந்த செயல்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழலியலுக்கும் இடையே ஒரு சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு திசைகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், ஜவுளி, வேளாண்- உணவு, சுற்றுலா முதலிய துறைகளில் கவனம் செலுத்தி, 2029-ம் ஆண்டிற்குள் இத்தாலிக்கும், இந்தியாவிற்கும் இடையேயான 20 பில்லியன் யூரோ (ரூ.2.24 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தக இலக்கை அடையவும், அதை விஞ்சவும் நாங்கள் விரும்புகிறோம்.
இந்தச் சூழலில், இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி), நவீனப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு, எண்ம (டிஜிட்டல்) வலையமைப்புகள், எரிசக்தி அமைப்புமுறைகள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றின் மூலம் எங்கள் பிராந்தியங்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வையாகும். இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்காக, இந்தியாவும் இத்தாலியும் மற்ற கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன.
இந்தியா - இத்தாலி இடையேயான ஆழமான கூட்டாண்மை மற்றும் நீடித்த கலாசாரப் பிணைப்புகளைப் பயன்படுத்தி, எங்கள் பொதுவான சவால்களை எங்களால் எதிர்கொள்ள முடியும்.
இந்திய கலாசாரத்தில், "தர்மம்' எனும் கருத்துரு, எங்கள் செயல்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதே சமயம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்த எண்ம (டிஜிட்டல்) யுகத்தில், 'வசுதைவ குடும்பகம்'(உலகம் ஒரு குடும்பம்) என்ற கொள்கை வலிமையாக எதிரொலிக்கிறது.
இத்தகைய மாண்புகள், மறுமலர்ச்சிக் காலத்தில் வேரூன்றிய இத்தாலியின் மனிதநேயப் பாரம்பரியத்தில் இயல்பாகவே பிரதிபலிக்கின்றன. அது ஒவ்வொரு தனிநபரின் மாண்பையும், மக்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் கலாசாரத்தின் ஆற்றலையும் எடுத்துக்காட்டுகிறது.
எனவே, எங்கள் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை, மக்களை மையமாகக் கொண்டு, ஒரு வலிமையான மற்றும் முற்போக்கான இந்திய-இத்தாலி கூட்டாண்மைக்கு அடித்தளம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









