கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது பற்றி...

News image

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - x

Updated On :21 மே 2026, 4:09 pm IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்தின் பேச்சுக்கு எதிர்வினையாற்றும் வகையில் நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட நையாண்டி கட்சியான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது.

போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே, ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற பெயரில் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கினார்.

அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறி ஆகியவற்றை கொள்கையாக அறிவிக்கப்பட்ட இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை, நான்கே நாள்களில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரத் தொடங்கினார்கள்.

ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் தளம் முடக்கியுள்ளது.

சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்க, இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Story image

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அபிஜித் தீப்கே, “எதிர்பார்த்தபடியே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் முடக்குவதுதான் ஜனநாயகமா என்று அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.45 கோடியைக் (மே 21, பிற்பகல் 3 மணி நிலவரம்) கடந்துள்ளது.

மேலும், கரப்பான்பூச்சி மக்கள் கட்சிக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பல்வேறு கணக்குகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில், அந்த பக்கங்களையும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்தொடரத் தொடங்கியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்வோர் (88 லட்சம்) எண்ணிக்கையைவிட கிட்டத்திட்ட இரு மடங்கு பின்தொடர்வோரை கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பெற்றுள்ளது.

இதுவரை கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து, 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கவனம்பெறும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் வாக்குறுதிகள்

1. ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது தடை செய்யப்பட வேண்டும்

2. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படாமலே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு

3. கட்சித் தாவும் எம்எல்ஏ, எம்பிக்கள் 20 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை

Summary

Cockroach Janata Party X Page Suspended!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.