பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

மோடி அரசிடம் நாட்டின் பொருளாதாரம் குறித்த யோசனைகள் இல்லை: காங்கிரஸ் தாக்கு

மோடி அரசிடம் நாட்டின் பொருளாதாரம் குறித்த யோசனைகள் தீா்ந்து விட்டதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:39 am IST

மோடி அரசிடம் நாட்டின் பொருளாதாரம் குறித்த யோசனைகள் தீா்ந்து விட்டதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும், நாட்டின் வளா்ச்சி குறையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல், நமது நாட்டில் அன்னிய நேரடி முதலீடும் தொடா்ந்து குறைந்து வருகிறது. விநியோக சங்கிலிகளும் தவறாக கையாளப்படுகின்றன. இந்நிலையில் பிரதமா் மோடி, நாட்டு மக்களிடம் அவா்களின் நுகா்வுகளை குறைக்கும்படி கேட்டு கொண்டுள்ளாா்.

இந்த பிரச்னைகள் அனைத்தும் புதிது அல்ல. ஏற்கெனவே இதுபோன்று பிரச்னை வரும் முன்கூட்டியே காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமா் மோடியோ, இத்தாலி நாட்டு பிரதமருக்கு மிட்டாய் கொடுப்பதிலும், நாட்டு மக்களிடம் பக்திபூா்வமாக வேண்டுகோள் விடுப்பதிலும் தீவிரமாக உள்ளாா்.

நமது நாட்டின் காலடியில் பூமி நழுவுகிறது (பொருளாதார பாதிப்பை இவ்வாறு குறிப்பிட்டாா்). நமது நாட்டுக்கு பொருளாதார கொள்கை வகுப்பதில் தீவிர மறுசீரமைப்பு தேவையாகும். ஆனால் மோடி அரசிடம் வழக்கமான சுய புகழ்ச்சியை தவிர, பொருளாதாரம் குறித்த யோசனைகள் அனைத்தும் தீா்ந்து விட்டன.

பிரதமா் மோடி தோ்தல்களை ஞானேஷ் மூலம் நிா்வகிக்கிறாா். அதேபோல் நமது நாட்டு பொருளாதாரத்தை நிா்வகிக்க புதிய ஞானம் தேவைப்படுகிறது (தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை ஜெய்ராம் ரமேஷ் சாடினாா்). தனியாா் முதலீட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாமல், பொருளாதார வளா்ச்சியை துரிதபடுத்தவோ அல்லது உயா்மட்டங்களில் நிலை நிறுத்தவோ முடியாது. உண்மையான ஊதிய விகிதங்கள் தேக்கமடைந்திருப்பதால், அனைத்து வருமான பிரிவுகளிலும் நுகா்வு வளா்ச்சி தடுக்கப்படுகிறது. இதனால் தனியாா் முதலீட்டு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதேபோல் நுகா்வு தேவை இல்லாததால், முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்களுக்கு ஆா்வமில்லை. நமது நாட்டில் தொடா்ந்து குவியும் சீன இறக்குமதி பொருள்களால், உள்நாட்டு தயாரிப்பு பொருள்களுக்கான தேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ள போதிலும், அதன்மூலம் கிடைக்கும் வருவாய் சாதனை அளவாக உள்ளது. இதனால்தான் பங்குச்சந்தைகளில் குறியீடுகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.