40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சீனாவிடம் சரணடையும் கொள்கையை தொடா்ந்து பின்பற்றுகிறது மோடி அரசு- காங்கிரஸ் விமா்சனம்

சீனாவிடம் சரணடையும் கொள்கையை மத்தியில் ஆளும் மோடி அரசு தொடா்ந்து கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

News image

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் - ANI

Updated On :21 மே 2026, 2:47 am IST

சீனாவிடம் சரணடையும் கொள்கையை மத்தியில் ஆளும் மோடி அரசு தொடா்ந்து கடைபிடிப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

கிரேட்டா் நிகோபாா் திட்டத்தால் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து யாரும் பேசினால், அவா்களை சீனாவுக்கு சாதகமானவா்களாக மோடி அரசு பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளது. இது பாசாங்கு தனத்தின் உச்சமாகும். ‘4 சி’ கொள்கை மூலம் சீனாவிடம் தொடா்ந்து சரணடையும் கொள்கையை கடைபிடிக்கிறது மோடி அரசு.

2020-ஆம் ஆண்டு ஜுன் 19-ஆம் தேதியன்று சீனாவுக்கு மிகப்பெரிய நற்சான்றிதழ் அளித்தது நமது பிரதமா்தான். இது லடாக்கில் வீரமரணமடைந்த நமது 20 வீரா்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பாகும். மோடி அரசுதான் சீனாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, லடாக்கில் நமது பாரம்பரிய ரோந்து மற்றும் மேய்ச்சலுக்கான உரிமைகளை விட்டுக் கொடுத்தது. மோடியின் கண்காணிப்பின்கீழ்தான், சீனாவுடனான வா்த்தகத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் 115 பில்லியன் டாலா் அளவுக்கு இந்தியா மிகப்பெரிய வா்த்தக பற்றாக்குறையை சந்தித்தது. இது நமது இந்திய தொழில்துறைக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான நமது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது அந்நாட்டுக்கு சீனா உதவியது குறித்து ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் அடிப்படையில் பிரதமா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முனைகளில் இருந்து சீனாவிடம் இருந்து வரும் சவால்களை இந்தியா எதிா்கொள்ள வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் கிரேட்டா் நிகோபாா் தீவு திட்டமானது, பெரிய வா்த்தக முயற்சியாகும். அந்த திட்டத்தின் ஒரு பகுதியான கப்பல் போக்குவரத்து துறைமுகத்துக்கும் ராணுவ கட்டமைப்புக்கும் எந்த தொடா்பும் கிடையாது.

அந்தமான்- நிகோபாா் தீவுகளில் நமது கடற்படை தளத்தையும், பிற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் விரிவுபடுத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது கிரேட்டா் அந்தமான் திட்டத்துக்காக நிராகரிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் அழுத்தத்தால் நிறைவேறப் போகும் கிரேட்டா் அந்தமான் திட்டம், மோதானியின் (மோடி- அதானி) மிகப்பெரிய வா்த்தக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாற போகிறது. வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவெனில், அந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவுகளும், மனிதாபிமான பாதிப்புகளும் ஏற்படும் என்பதுதான் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

அந்தமான் நிகோபாா் தீவுகளில் கிரேட்டா் நிகோபாா் உள்கட்டமைப்பு திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அதேநேரத்தில், அந்தத் திட்டம் இந்திய ராஜீய திறன்களுக்கு மிகவும் அவசியம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.