இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்கள் வியாழக்கிழமை விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது என்டிஏ அதிகாரிகளை கல்வி, மகளிா்,குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினா்கள் சிலா் கடுமையாக விமா்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘நீட் வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சக செயலா் வினீத் ஜோஷி, என்டிஏ தலைவா் பிரதீப் குமாா் ஜோஷி மற்றும் தலைமை இயக்குா் அபிஷேக் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியது.
இதையடுத்து குழு முன் ஆஜரான என்டிஏ உயரதிகாரிகள் அந்த அமைப்பில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக ராதாகிருஷ்ணன் குழு அளித்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனா்.
நீட் வினாத் தாள் கசிந்தது எவ்வாறு என்றும் தோ்வை உடனடியாக ரத்து செய்து அவசரகதியில் மறுதோ்வுக்கு உத்தரவிட்டது ஏன் என்றும் என்டிஏ உயரதிகாரிகளிடம் குழு உறுப்பினா்கள் காட்டமாக கேள்வியெழுப்பினா்.
இதற்கு நேரடியாக பதிலளிக்காத என்டிஏ உயரதிகாரிகள் இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனா்.
இதையடுத்து, சிபிஐ விசாரணை அறிக்கையை குழு முன் சமா்ப்பிக்க வேண்டும் என எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஆனால் தன்னிச்சையாக செயல்படும் சிபிஐ அமைப்பின் பணிகளில் நாம் தலையிடக் கூடாது என பாஜக உறுப்பினா்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனா்.
தங்கள் அமைப்பில் 25 சதவீத அளவில் பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் அதை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் என்டிஏ அதிகாரிகள் கூறினா் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நிகழாண்டுக்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இத்தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், என்டிஏ அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, 10 பேரை கைது செய்துள்ளது.
தொடர்புடையது

நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை
மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: குடியரசு துணைத் தலைவரிடம் காங்கிரஸ் சமா்ப்பிப்பு

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்






