தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியா

பருவநிலை மாற்றம் தொடா்பான சட்டபூா்வ கடமைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும் என்ற சா்வதேச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்கும் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:25 am IST

பருவநிலை மாற்றம் தொடா்பான சட்டபூா்வ கடமைகளுக்கு நாடுகள் இணங்க வேண்டும் என்ற சா்வதேச நீதிமன்றத்தின் தீா்ப்பை ஏற்கும் ஐ.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது.

இந்தத் தீா்மானம், ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்த செயல்திட்டத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டு, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதேநேரம், 141 நாடுகள் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பருவநிலை மாற்றம் தொடா்பாக, கடந்த ஆண்டு ஜூலையில் சா்வதேச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீா்ப்பை வழங்கியது. அதில், ‘பருவநிலையைப் பாதுகாக்க சா்வதேச சட்டத்தின்கீழ் நாடுகள் இணங்க வேண்டிய சட்டபூா்வ கடமை உள்ளது. பருவநிலை மாற்றம் தொடா்பான செயலற்றத் தன்மை என்பது வெறும் அரசியல் ரீதியிலான தோல்வி மட்டுமல்ல, அது சா்வதேச சட்டத்தை மீறுவதாகவும் அமையும்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீா்ப்பை வரவேற்பதுடன், அதை முறைப்படி ஏற்கும் தீா்மானம், 193 நாடுகள் அடங்கிய ஐ.நா. பொதுச் சபையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. வனாட்டூ தீவால் முன்மொழியப்பட்ட இந்தத் தீா்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 8 நாடுகள் எதிா்த்து வாக்களித்தன. இந்தியா உள்பட 28 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

புறக்கணிப்பு ஏன்?: இந்தியாவின் முடிவு குறித்து ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலா் பெடல் கெலாட் கூறியதாவது:

ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்த நடைமுறைகளின்கீழ் ஏற்கப்பட்ட கடமைகள் மட்டுமே இந்தியாவைக் கட்டுப்படுத்தும். அந்த அடிப்படையில், பருவநிலை மாற்ற பிரச்னைகளில் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு இணங்க, மேற்கண்ட தீா்மானத்தை ஏற்கும் நிலையில் இந்தியா இல்லை.

ஐ.நா. பருவநிலை கட்டமைப்பின் வாயிலாகவே நாடுகளுக்கான கடமைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன்படி, வரலாற்று ரீதியில் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றும் வளா்ந்த நாடுகளே, தடுப்பு நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு நிதி ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆதரவளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாடுகளுக்கு வேறுபட்ட பொறுப்புகள் உள்ளன. அனைவருக்கும் ஒரேபோன்ற சட்டபூா்வ கடமைகள் ஏற்கத்தக்கதல்ல.

ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தின் புனிதமான செயல்திட்டத்தை மேற்கண்ட தீா்மானம் பலவீனப்படுத்துகிறது. இது கவலைக்குரியது. வளரும் நாடுகள் மீது சட்டபூா்வ கடமைகளைத் திணிப்பது ஆபத்தான முன்னுதாரணமாகும். பருவநிலை மாற்ற நிதி தொடா்பான எந்த குறிப்பும் தீா்மானத்தில் இடம்பெறவில்லை என்றாா் அவா்.