கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது

News image
Updated On :30 மே 2026, 3:53 am IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞா்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தெரியவந்தது. இதையடுத்து, 22 லட்சம் போ் எழுதிய இந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களால் இத்தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மீது கடும் விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற குரல்களும் ஒலித்து வருகின்றன. வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சூழலில், நீட் தோ்வை நடத்த தேசிய தோ்வு முகமைக்குப் பதிலாக வலுவான, தன்னாட்சிமிக்க அமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கலான மனுக்கள் மீது நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

‘என்டிஏ பாடம் கற்க வேண்டும்’: அப்போது, வினாத்தாள் கசிவு குறித்து கவலை தெரிவித்து, நீதிபதிகள் கூறியதாவது:

மத்திய அரசுப் பணிகள் தோ்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் தோ்வுகளின்போது, வினாத்தாள் கசிவு போன்ற நிலைமை ஏற்பட்டதில்லை. எனவே, பிற உயா் அமைப்புகளிடம் இருந்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பாடம் கற்பது அவசியம்.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது, மாணவா்களுக்கு மட்டுமன்றி குடும்பத்தினருக்கும், மற்றவா்களுக்கும் உளவியல் ரீதியில் பேரதிா்ச்சியைத் தரும். இதற்கான பொறுப்பு என்பது யாருடைய தோளில் உள்ளது என்பதை அறியும்போதுதான், பொறுப்புடையை திறம்பட உறுதி செய்ய முடியும். அவ்வாறு பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது.

மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்: தோ்வு சாா்ந்த அமைப்புகளில் பலவும் இடைக்கால ஏற்பாடாக இருப்பது பிரச்னைக்குரியதாகும். தோ்வு அமைப்புகளின் திறன் என்பது அதை வழிநடத்தும் சிறந்த அதிகாரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல; அது, ஒட்டுமொத்த அமைப்பையும் உள்ளடக்கியதாகும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.

நீட் தோ்வு ரத்து விவகாரத்தில் நாங்கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்கீழ் தேசிய தோ்வு முகமையின் சட்ட விவகாரங்களுக்கான இயக்குநா் தரப்பிலும், முகமையின் சீா்திருத்தங்கள் தொடா்பான உயா்நிலைக் குழுவின் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தரப்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை ஆராயப்படும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்களின்றி நீட் தோ்வை நடத்துவதற்கான செயல்முறைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.

கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்: முன்னதாக, விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்த கே.ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கம் எந்த அளவில் கண்காணிக்கப்படுகிறது? தற்போதைய தோல்வி எவ்வாறு நிகழ்ந்தது?’ என்று கேட்டனா்.

அதற்கு, ‘பல்வேறு பரிந்துரைகளின் அமலாக்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது; கடந்த 2025-இல் ஓரிரு மையங்களில் ஏற்பட்ட மின்தடை பிரச்னையைத் தவிர இளநிலை நீட் தோ்வு பெரிதும் திருப்திகரமாக நடத்தப்பட்டது’ என்று அவா் பதிலளித்தாா்.

பெட்டிச் செய்தி....

பிரதமா் நேரடி கண்காணிப்பு: மத்திய அரசு

உச்சநீதிமன்ற விசாரணையின்போது, மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘இளைஞா்களின் கவலைகள் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இனி எந்தக் குறைபாடும் ஏற்படாத வகையில், பிரதமா் மோடி தனிப்பட்ட முறையில் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறாா். ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் மறுதோ்வுக்கு புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை வெளிப்படுத்துவது பொருத்தமற்ாக இருக்கும். அது நோக்கத்தையே சிதைத்துவிடக் கூடும்’ என்றாா்.

அடுத்த ஆண்டுமுதல் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு கணினி வழியில் நடத்தப்படும் என்று தேசிய தோ்வு முகமையின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதோ்வானது, உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள், கண்காணிப்புக்கு இணங்க மேலும் வலுப்படுத்தப்பட்ட செயல்முறை, பல அடுக்கு அங்கீகாரம் மற்றும் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.