பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும்: மும்பை உயர்நீதிமன்றம்
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் எஸ்ஐஆர் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் இம்ரான் கான்
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் எஸ்ஐஆர் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்றதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். ஆனால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான இந்திய வெளிநாட்டு குடிமகன் எனப்படும் ஓசிஐ அட்டையையும் அவர் வைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 10 அன்று, தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் போராட்டம் நடைபெற்றது.
அதில், நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை கொண்டவரான இம்ரான் கான் இந்தியாவில் அரசியல் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்பது சட்டப்படி தவறு என்றும் விதிகளுக்குப் புறம்பானது என்றும் மும்பை பாஜக தலைவட் கிரிட் சோமையா காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ’வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகத்திற்கு’ அனுப்பப்பட்டது. அங்கிருந்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025 பிரிவு 7-ன் கீழ் இம்ரான் கானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அவர் அக். 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டது.
அந்த நோட்டீஸை எதிர்த்து இம்ரான் கான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், போராட்டத்தை தான் ஒருங்கிணைக்கவில்லை என்றும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காமல் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காண மட்டுமே சென்றதாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது தரப்பின் நியாயத்தைக் கேட்காமல் உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவரது வாதத்தில் குறிப்பிடப்பட்டது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அடுத்த விசாரணை நடைபெறும் நவ. 2 வரை இம்ரான் கான் மீது கட்டாய நடவடிக்கை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அக். 28-க்குள் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை நவ. 2 வரை நிறுத்திவைத்து இடைக்காலத் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
இந்த வழக்கில் இம்ரான் கானை கடுமையாக விமர்சித்த உயர் நீதிமன்றம், “இந்திய வம்சாவளி வெளிநாட்டவர் என்கிற ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியக் குடிமக்களுக்கு இணையானவர்கள் அல்ல. அவர்களால் அரசை விமர்சிக்க முடியாது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தால் நடிகருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எனவே, போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவருக்கு எந்த வேலையும் இல்லை. அரசுக்கு எதிராகவும் அதன் முடிவுகளுக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டங்களில் ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால், அமெரிக்காவிற்குச் சென்று போராடுங்கள். அங்கே சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். ஆனால், இங்கே எதற்கு எதிராகவும் போராடுவதையும் அனுமதிக்க முடியாது.
எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று இம்ரான் கான் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். அதேநேரம், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலகம் அவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வழங்கிய அறிவிக்கை மீதான இடைக்காலத் தடை, அவர் அதற்குப் பதிலளிக்கும் வாய்ப்பைப் பெறும் வரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது.
Summary
Bollywood actor Imran Khan must offer an unconditional apology: Bombay High Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


