ராக்கெட், வாண வேடிக்கைகள் வெடிக்கத் தடை!

ராக்கெட்டுகள் மற்றும் வாண வேடிக்கைகளை வெடிக்க மும்பை மாநகராட்சி ஆணையம் தடை விதித்துள்ளது.

வாண வேடிக்கை - கோப்புப் படம்

Updated On :

மும்பை மாநகரம் முழுவதும் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராக்கெட்டுகள் மற்றும் வானத்தில் வெடிக்கும் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கு மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.

தீபாவளி நாளன்று மும்பையின் பல பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வருகிற நவ. 25 வரை மும்பை நகரத்திற்குள் ராக்கெட்டுகள் மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்க மும்பை பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.

பேரிடர் ஆணையத்தின் உத்தரவின்படி குடியிருப்பு கட்டடங்கள், வீட்டின் மேற்கூரைகள், பால்கனிகள் மற்றும் குடிசைப் பகுதிகள் என அனைத்து இடங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

மும்பையில் தீபாவளி நாளின் இரவில் மட்டும் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்று பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் குடிசைகள், கடைகள், வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் என பல இடங்கள் எரிந்து சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, மும்பை கூடுதல் மாநகராட்சி ஆணையர் பிரஜக்தா வர்மா - லவங்கரே ஆணையின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டுகள் மற்றும் வாண வேடிக்கைகள் போன்ற பட்டாசுகள் வீடுகளின் மேற்கூரைகள், பால்கனிகள், ஜன்னல்கள் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மீது விழுந்து தீ விபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் அவற்றிற்கு தடை விதிப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகள், உயரமான கட்டடங்கள், குடிசைப் பகுதிகள், குறுகிய சாலைகள் மற்றும் நெருக்கமாக அமைந்துள்ள குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டடங்களில், இதுபோன்ற பட்டாசுகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் என்றும், இதனால் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அபாயம் ஏற்படும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, மும்பை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில், நவம்பர் 9 முதல் நவம்பர் 25, 2026 அன்று இரவு 11:59 மணி வரை இந்தத் தடை அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பட்டாசுகளைப் பயன்படுத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீ விபத்துகளைத் தடுக்கவும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Summary

The Mumbai Municipal Corporation has banned the bursting of rockets and fireworks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.