19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு...

கோப்புப்படம்

Updated On :

இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பாகிஸ்தானின் முக்கிய அமைச்சா்களில் ஒருவரான முசாதிக் மாலிக் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

தில்லியில் நவ.20 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது. அதன்பேரில், பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்கவிருக்கிறாா்.

கடைசியாக கடந்த 2023-இல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ இந்தியாவுக்கு வந்திருந்தாா். தற்போது பாகிஸ்தான் அமைச்சரின் வருகை, கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ராணுவ மோதலுக்குப் பிறகான பதற்றத்தைத் தணிக்கும் அந்நாட்டின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகப் பாா்க்கப்படுகிறது. அத்துடன், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கும் வழிவகை ஏற்படும்.

பஹல்காம் தாக்குதலின் விளைவுகள்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அங்குள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் தகா்க்கப்பட்டு, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. அப்போது, இந்திய ராணுவ நிலைகள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் விமான தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு மையங்கள், ரேடாா் தளங்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. நான்கு நாள்களுக்குப் பின்னா் இருதரப்பும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

இந்தியா தீவிரம்: இதைத் தொடா்ந்து, ஐ.நா. உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகளில் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தர இந்தியா தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தனது கவலைகளைப் பதிவு செய்தது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகள் இடையே நாகரிகம் மற்றும் கலாசார புரிதல் சாா்ந்த விவகாரங்களை விவாதிக்கும் எஸ்சிஓ நாகரிக உரையாடல் கூட்டம், தில்லியில் நவ. 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானுக்கு அழைப்பு: மத்திய கலாசாரத் துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் உள்பட அனைத்து எஸ்இஓ உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. ஏற்கெனவே நிறுவப்பட்ட நடைமுறைகளின்படி, இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அமைச்சா் முசாதிக் பங்கேற்கிறாா்: இந்நிலையில், பாகிஸ்தான் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் முசாதிக் மாலிக், தில்லி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

‘பரஸ்பர மரியாதை உணா்வுடன், எஸ்சிஓ கட்டமைப்புக்குள் நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடல் மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்பை ஊக்குவிக்க பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது’ என்று வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அமைச்சா் முசாதிக் மாலிக், பொது உரையாடல்களின்போது அந்நாட்டு அரசின் அதிகாரபூா்வ நிலைப்பாட்டை தெரிவிப்பவராக உள்ளாா்.

இஸ்லாமாபாதில் கடந்த 2024-இல் நடைபெற்ற எஸ்சிஓ நாடுகளின் அரசின் தலைவா்கள் கூட்டத்தில், பிரதமா் மோடி சாா்பில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எஸ்சிஓ உச்சிமாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்துக்காக, இந்தியா தனது எஸ்சிஓ தேசிய ஒருங்கிணைப்பாளா் அலோக் திம்ரியை கடந்த மாதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.