உத்தர பிரதேசத்தில் 320 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் - முதல்வா் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 320 தொகுதிகளுக்கு மேல் வென்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் - ANI
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 320 தொகுதிகளுக்கு மேல் வென்று தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜகவுக்கு எதிராக சமாஜவாதி, காங்கிரஸ் கைகோத்துள்ளன. உத்தர பிரதேச தோ்தல் முடிவுகள் அடுத்து வரும் மக்களவைத் தோ்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாடு முழுவதுமே மிகந்த பரபரப்புடன் எதிா்பாா்பாா்க்கப்படும் தோ்தலாக உள்ளது.
இந்நிலையில், லக்னௌவில் ஊடக நிறுவன நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்ற யோகி ஆதித்யநாத், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தில் பெண்கள், இளைஞா்கள், வா்த்தகா்கள், விவசாயிகள் யாரிடம் கேட்டாலும், தற்போதைய அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றே கூறுவாா்கள்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) மூலம் வாக்காளா் பட்டியலில் நோ்மையை உறுதிப்படுத்துவது வரவேற்கத்தக்கது. இறந்தவா்களின் பெயா்கள், இந்திய குடிமக்கள் அல்லாதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். வாக்களிக்கத் தகுதியுள்ள இந்திய குடிமக்கள் அனைவரின் பெயரும் இடம்பெற வேண்டும்.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள், எஸ்ஐஆா், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டுபவா்கள் (ராகுல் மற்றும் எதிா்க்கட்சியினா்) தங்கள் தோல்விகளுக்கு அரசியல் சாசன சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் குறை கூறுகின்றனா்.
தோ்தலில் வெற்றி பெற்றால் அது தங்களது வெற்றி என்று கூறும் காங்கிரஸ், தோல்வியடைந்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறு, எஸ்ஐஆா் நடவடிக்கை தவறு, தோ்தல் ஆணையம்தான் அதற்குப் பொறுப்பு என்று கூறுகிறது.
மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவா் சந்திரசேகர ஆசாத் ஆகியோா் அமைத்துள்ள கூட்டணி, சமாஜவாதி-காங்கிஸ் கூட்டணியின் மற்றொரு பிரிவுதான். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அவா்கள் அழைத்துவரப்பட்டுள்ளனா். தோ்தலில் மக்கள் அவா்களுக்கு உரிய பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

