மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது: மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது என மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தியிருப்பது பற்றி...

தில்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்ட கர்நாடக மாநில அரசை எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்று தில்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை புதன்கிழமை சந்தித்து தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் வலியுறுத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நா.ஆனந்த், பொதுப் பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் கடிதம் அளித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது மாநில நீர் வளத் துறை அரசு செயலர் பிரசாந்த் மு. வடநேரே, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மத்திய அமைச்சருடனான சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டம், காவிரி நடுவர் மன்றத்தின் 2007-ஆம் ஆண்டு பிப். 5-ஆம் தேதியிட்ட இறுதித் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு பிப். 16-ஆம் தேதியிட்ட தீர்ப்புக்கும் முரணானது. மேலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்துவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 27-ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. மேலும், இந்தத் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என பிரதமரிடம் தமிழக முதல்வர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்.
மேக்கேதாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட காவிரி நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆக.3-ஆம் தேதி ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு, மேக்கேதாட்டு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக முன்னெடுக்க முயற்சித்து வருவது கவலைக்குரியதாகும். எனவே, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து, மேக்கேதாட்டு திட்டத்துக்கு எதிரான கருத்துகளை வலியுறுத்தும் வகையில் கடிதம் வழங்கியுள்ளனர்.
அதில், கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய ஜல்சக்தி அமைச்சகமும், மத்திய நீர் ஆணையமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நதி மற்றும் அதன் துணை ஆறுகளில் புதிய நீர்த்தேக்கங்கள் அமைத்தல் அல்லது நீரைத் திசைதிருப்புதல் உள்ளிட்ட எந்தவொரு புதிய திட்டத்தையும், காவிரிப் படுகையில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டபூர்வ ஒப்புதல் மற்றும் இசைவின்றி கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக மாநிலத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய நீர் ஆணையத்தின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை தமிழக அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
"கர்நாடக முன்மொழிவை பரிசீலிக்கவே கூடாது'
மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடர்புடைய கர்நாடகத்தின் முன்மொழிவை எந்த வகையிலும் பரிசீலிக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீலிடம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தியதாக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.
மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு தில்லி தமிழ்நாடு இல்லத்தில் மூவரும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்புக்கு முரணாக வேறு எந்தவொரு அமைப்போ, அரசோ செயல்பட முடியாது என்பதை மத்திய அமைச்சரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம்.
சுமார் 70 ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த அந்தத் தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமன்றி, புதுச்சேரி மற்றும் கேரளத்துக்கும் சாதகமாக வழங்கப்பட்டது. காவிரி நீர் விநியோகம் எவ்வாறு, எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை மிகச் சரியாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், அதை மீறும் வகையில் உரிய முறையில் நீரைப் பகிராமல், மேக்கேதாட்டில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) மத்திய நீர் வளத் துறையிடம் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது சட்ட விரோதமானது என்பதை மத்திய அமைச்சரிடம் விளக்கினோம்.
இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த முந்தைய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விசாரணையின்போது டிபிஆர்-ஐ சமர்ப்பிக்கலாம் என நீதிமன்றம் கூறியபோதிலும் அது தீர்ப்புக்கு எதிரானது என்பதை தற்போதைய தமிழக அரசு பதிவு செய்துள்ளது. கர்நாடகத்தின் டிபிஆர் மீது எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். சட்ட ரீதியிலான இந்த பிரச்னையை கூர்ந்து கவனித்த மத்திய அமைச்சர், டிபிஆர் தொடர்பாக தற்போதைக்கு எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என்று கூறியுள்ளார். அவருடனான சந்திப்பு சாதகமாக இருந்தது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

